33 ஆண்டுகள் சிறையில் கழித்தவர்: சிறைப் பறவைக்கு மறுவாழ்வு அளித்த கோவை போலீஸார்

பிக்பாக்கெட் வழக்குகளில் 33 ஆண்டுகள் சிறையில் கழித்தவருக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில் கோவை போலீஸார் சார்பில் பெட்டிக் கடை வைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாக்கெட் வழக்குகளில் 33 ஆண்டுகள் சிறையில் கழித்தவருக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில் கோவை போலீஸார் சார்பில் பெட்டிக் கடை வைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை, ரத்தினபுரி சம்பத் வீதியைச் சேர்ந்தவர் பாபு என்கிற பெரியபூச்சி (59). இவர், 1978-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பிக்பாக்கெட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது சுமார் 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர், தனது வாழ்நாளில் சுமார் 33 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளாராம்.
இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர், பிக்பாக்கெட் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, திருந்தி வாழ முடிவு செய்துள்ளதாகவும், பிழைப்புக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும்படியும், பிக்பாக்கெட் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் பாபு தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன்னர் சிறையில் இருந்து பெரியபூச்சி விடுவிக்கப்பட்டார். இதன் பிறகு பல்வேறு இடங்களில் பாபுவை வேலைக்குச் சேர்க்க போலீஸார் முயற்சி செய்தனர். ஆனால், அவருக்கு வேலை கொடுக்க யாரும் முன்வரவில்லை.
இதையடுத்து, கோவை மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.லட்சுமியின் நேரடி மேற்பார்வையில் இயங்கிவரும் பிக்பாக்கெட் தடுப்புப் பிரிவு போலீஸார் பாபுவுக்கு பெட்டிக் கடை வைத்துக் கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி, உதவி ஆய்வாளர்கள் செ.முருகசாமி, தாஜ்நிஷா, தலைமைக் காவலர்கள் குமார், சதீஷ் குமார் ஆகியோர் சேர்ந்து ரூ. 3 ஆயிரம் செலவில் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள தனியார் நகைக் கடை அருகே உள்ள நடைபாதையில் ஏப்ரல் 14-ஆம் தேதி பாபுவுக்குப் பெட்டிக் கடை வைத்துக் கொடுத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், 'பிக்பாக்கெட் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் அவருக்கு வேலை கொடுக்க யாரும் முன்வரவில்லை. தற்போது, திருந்தி வாழத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். ஆகவே, எங்களது சொந்தச் செலவில் சிறியதாக பெட்டிக் கடை வைத்துக் கொடுத்துள்ளோம். இதில், நாள்தோறும் ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை வியாபாரம் நடைபெறுகிறது. இதன் மூலமாக அவருக்கு சுமார் ரூ. 400 வரை வருமானம் கிடைக்கும். இந்தச் செயல் திருந்தி வாழ நினைப்பவர்களுக்கு உதாரணமாக அமையும்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com