பொது வேலை நிறுத்தம்: அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக போக்குவரத்துத் தொழிலாளர்களும் போராட இருப்பதால் முழு அடைப்பு நடைபெறும் 25-ஆம் தேதி, கோவையில் அரசு, தனியார் பேருந்துகள் பெரும்பாலும் இயங்காது

விவசாயிகளுக்கு ஆதரவாக போக்குவரத்துத் தொழிலாளர்களும் போராட இருப்பதால் முழு அடைப்பு நடைபெறும் 25-ஆம் தேதி, கோவையில் அரசு, தனியார் பேருந்துகள் பெரும்பாலும் இயங்காது என்று முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தெரிவித்தார்.
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, கோவையில் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வட கோவையில் உள்ள திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிங்காநல்லூர் திமுக எம்.எல்.ஏ. கார்த்திக், மாவட்டச் செயலர்கள் நாச்சிமுத்து, முத்துசாமி, காங்கிரஸ் புறநகர் மாவட்டத் தலைவர் மகேஷ்குமார், தபெதிக பொதுச் செயலர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பொங்கலூர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
இந்தப் போராட்டம் விவசாயிகளுக்காக மட்டுமின்றி, நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்தும், பவானியில் அணை கட்டும் கேரள அரசைக் கண்டித்தும், ரேஷனில் பொருள்களை சரிவர வழங்கவும், பெருகி வரும் லஞ்சம் ஊழலைக் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி நடத்தப்படுகிறது.
இந்தப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், திராவிடர் கழகம், தபெதிக, விவசாயத் தொழிலாளர் கட்சி, எம்.ஜிஆர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தொழிற் சங்கங்கள் கலந்துகொள்ள உள்ளன.
இந்தப் போராட்டத்தில் முழு அளவில் பங்கேற்க இருப்பதாக அதிமுக தவிர்த்த பிற போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், கோவையில் அரசு, தனியார் பேருந்துகள் பெருமளவில் இயங்காது. அதைப்போலவே, கோவை மாநகரம், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள வர்த்தகர் சங்கங்கள், மணல் லாரி உள்ளிட்ட வாகன உரிமையாளர் சங்கங்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், சிறு தொழில் அமைப்புகளின் சங்கங்களும் அறிவித்துள்ளன.
விவசாயிகளுக்காக நடைபெறும் இந்த போராட்டத்தில் பொதுமக்களும் முழு அளவில் பங்கேற்க வேண்டும். போராட்டம் முழு அளவில் வெற்றி பெறும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com