மாவட்டத்துக்கு ரூ.110 கோடி வறட்சி நிவாரணம் ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்

கோவை மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவதற்காக ரூ. 110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவதற்காக ரூ. 110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள், குடிநீர் விநியோகம், வறட்சி நிவாரணம் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தைத் தொடர்ந்து வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதிலும் வறட்சி நிவாரணம் வழங்குவது, குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பது, ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க அரசு ரூ.1,118 கோடியை ஒதுக்கியுள்ளது. இதில், 21,600 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 15,557 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கோவையில், மாநகராட்சி, பேரூராட்சி, கிராமப் பகுதிகளில் ரூ.17.43 கோடி மதிப்பிலான 672 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 615 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வறட்சி நிவாரணத்தை பொறுத்தவரையில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அதிகபட்சமாக ரூ.184 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2-வது அதிகபட்சமாக கோவைக்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளுக்கு மட்டும் ரூ.90 கோடிக்கு மேல் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
வறட்சி நிவாரணம் பெறுவதற்கான ஆய்வில், விவசாயிகள் யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களும் உடனடியாக தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலர் தங்களுக்கு வறட்சி நிவாரணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து அவர்களையும் பயனாளிகள் பட்டியலில் சேர்க்க ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், அம்மன் கே.அர்ச்சுணன், ஓ.கே.சின்னராஜ், ஆர்.கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com