எழுதுவதைவிட வாசிப்பதில்தான் அதிகப் பயன்: பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பேச்சு

புத்தகங்கள் எழுதுவதைவிட அதை வாசிக்கும் வாசகர்களுக்குத்தான் அதிகப் பயன் உள்ளது என்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பேசினார்.

புத்தகங்கள் எழுதுவதைவிட அதை வாசிக்கும் வாசகர்களுக்குத்தான் அதிகப் பயன் உள்ளது என்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பேசினார்.
கோவை, விஜயா பதிப்பகம் சார்பில், மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் எழுதிய 'அதுவும் இதுவும்' நூல் வெளியீட்டு விழா தனியார் கல்லூரியில் சனிக்கிழமை நடபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமை வகித்தார்.
இதில், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசியதாவது:
தமிழ்ப் பேராசிரியர்கள், பல்கலைக்கழகங்கள் செய்ய முடியாதவற்றை நடிகர் சிவகுமார் செய்து வருகிறார். ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை அவர் பேசுவதைப் பார்த்து இன்றைய இளைஞர்கள் படிக்கவேண்டும். அவரது நினைவாற்றல் என்னை வியக்க வைக்கிறது. அவரது பணிகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஒரு படைப்பாளி, எழுத்தாளன் எழுதுவதை விட, அதைச் சொல்லும்போதுதான் அதன் தன்மை தெரியும். இந்த நூலில் கார்த்திகேயன் தனது அனுபவங்களைப் 14 பகுதிகளாகப் பிரித்து பகிர்ந்துள்ளார். தாய், தந்தையரை மதிக்கும் அவரின் பாங்கு இந்த விழாவைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. பொதுவாகப் புத்தகங்கள் எழுதுவதைவிட அதை வாசிக்கும் வாசகர்களுக்குத்தான் அதிகப் பயன் என்றார்.
நூலைப் பெற்றுக் கொண்ட நடிகர் சிவகுமார் பேசுகையில், இந்த நூலானது பேச்சு, மொழியில் வாசிக்க மிகவும் எளிமையாக உள்ளது என குறிப்பிட்டார்.
நூலாசிரியர் க.விஜயகார்த்திகேயன் தனது ஏற்புரையில், நல்ல பழக்க வழக்கங்களைப் புத்தகம் வாசிப்பதன் மூலமாகப் பெற முடியும் என்று நம்புகிறேன். எல்லா சூழலிலும், எல்லா மனிதர்களிடம் இருந்தும் நாம் ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். இலக்கியவாதிகளும், படைப்பாளிகளும் எழுதவேண்டும் என்று இல்லை. நாம் அனைவரும் வாழ்க்கையில் பெறும் ஒவ்வொரு அனுபவத்தையும் எழுதுவது அவசியம் என்றார். முன்னதாக, அதுவும், இதுவும் நூலை நூலாசிரியரின் தாய் உமா கண்ணன் வெளியிட நடிகர் சிவகுமார் பெற்றுக்கொண்டார்.
இதில், மாநகரக் காவல் ஆணையர் அ.அமல்ராஜ்,நூலாசிரியரின் தந்தையும், கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலருமான இரா.கண்ணன், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மண்டல வனப் பாதுகாவலர் எஸ். ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com