கோவையில் கைத்தறி, துணி நூல் கண்காட்சி தொடக்கம்

தமிழக அரசு சார்பில் கைத்தறி மற்றும் துணிநூல் துறைக் கண்காட்சியை கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.

தமிழக அரசு சார்பில் கைத்தறி மற்றும் துணிநூல் துறைக் கண்காட்சியை கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.
கோவை, பூமார்கெட்டில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் 3 நாள் கண்காட்சியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடக்கிவைத்தார்.
இந்தக் கண்காட்சி ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இதில், புதிய வடிவமைப்புகளில் கோவை, திருப்பூர் கோரா காட்டன், சிறுமுகை காட்டன் மற்றும் பட்டு சேலை ரகங்கள், நெகமம் காட்டன் சேலைகள், சென்னிமலை பெட்ஷீட்டுகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டு ரகங்கள், கடலூர் லுங்கி வகைகள், மதுரை, திண்டுக்கல், சுங்குடிச் சேலைகள் உள்பட அனைத்துக் கைத்தறி ஆடைகள் 20 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இக்கண்காட்சியில், விற்பனை இலக்காக ரூ. 20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 16 பயனாளிகளுக்கு ரூ. 11.01 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இதையடுத்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு ஜவுளித் துணிகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதித்திருந்தது. ஆனால், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தமிழகம் சார்ந்த பிரச்னையாகும். எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து போராடி வருகிறோம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில்,கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், கோ-ஆப்டெக்ஸ் தலைவர் மனோகரன், கோவை-திருப்பூர் நெசவாளர் கூட்டுறவு சங்க சம்மேளனங்களின் தலைவர் ஜகநாதன், உதவி இயக்குநர் (கைத்தறி மற்றும் துணிநூல் துறை) சாமிநாதன், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் நடராஜ் உள்ளிட்ட கைத்தறித் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com