நீதிபதிகள் பற்றாக்குறையால் வழக்குகளுக்குத் தீர்வு காண்பதில் தாமதம்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேச்சு

இந்தியாவில் நீதிபதிகள் பற்றாக்குறையால் வழக்குகளில் தீர்வு காண்பதில் தாமதம் ஏற்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கூறியுள்ளார்.

இந்தியாவில் நீதிபதிகள் பற்றாக்குறையால் வழக்குகளில் தீர்வு காண்பதில் தாமதம் ஏற்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கூறியுள்ளார்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 45 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் 2,400 வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கூடுதல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, அமைக்கப்பட்டுள்ள கூடுதல் தொழிலாளர் நீதிமன்றத்தின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கலந்துகொண்டு நீதிமன்றத்தைத் திறந்து வைத்து, பணிகளைத் தொடக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.பொங்கியப்பன், ஆட்சியர் த.ந.ஹரிஹரன், தலைமைக் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மதுரசேகர், நீதிபதிகள் கிறிஸ்டோபர், மணிமொழி, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கே.எம்.தண்டபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து நீதித் துறை பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசியதாவது:
தற்போது நடைமுறையில் உள்ள ஆங்கிலேயர் காலத்திய இந்திய தொழிற்சாலை சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
இதனால் நில உடமையாளர்களுக்கு கூடுதல் சிரமங்கள் வரக் கூடும். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதில் நீதிபதிகள், வழக்குரைஞர்களுக்கு மட்டும் பங்கு இல்லை. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் ஒரு காரணமாக உள்ளன.
வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டிய இடத்தில், 10 சதவீதம் பேர்கூட இருப்பதில்லை. நீதிபதிகள் பற்றாக்குறையால்தான் வழக்குகளுக்குத் தீர்வு காண்பதில் கால தாமதம் ஏற்படுகிறது.
அதேபோல, ஊழியர்கள் பற்றாக்குறையாலும் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்பவேண்டும். மேலும், நீதித் துறைக்கு ஒதுக்கப்படக் கூடிய நிதியை முறையாகப் பயன்படுத்தினால் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க முடியும்.
நீதிமன்றம் சென்றால் நீதி கிடைக்கும் என்ற மனநிலை மக்களிடம் ஏற்படும் வகையில் நீதிமன்ற அமைப்பு செயல்பட வேண்டும். கோவை மாவட்டம், தொழிலாளர்கள் நிறைந்த இடமாக இருப்பதால் தொழிலாளர்கள் சார்ந்த வழக்குகள் அதிகமாக உள்ளன. நிலுவையில் உள்ள 2,400 வழக்குகளுக்கும் தீர்வு காண கூடுதல் நீதிமன்றம் உதவியாக இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com