யானைகள் ஊருக்குள் நுழையும் தகவலை தெரிவிக்க அவசர உதவி எண் அறிமுகம்

யானைகள் வனப் பகுதிகளில் இருந்து ஊருக்குள் நுழைவது குறித்து வனத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக அவசர உதவி எண் (1800 4254 5456) கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.

யானைகள் வனப் பகுதிகளில் இருந்து ஊருக்குள் நுழைவது குறித்து வனத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக அவசர உதவி எண் (1800 4254 5456) கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக வனத் துறை சார்பில் சர்வதேச யானைகள் தின விழா வன உயர் பயிற்சி மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு வனப் பாதுகாவலர் ராமசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, யானைகள் - மனித மோதல் நடைபெறாமல் தடுக்கும் வகையில், வனக் குழுவினருக்கு டார்ச் லைட்டுகள், வனத் துறையினருக்கு வாகனங்கள், அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வகையில் கருத்தரங்குகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 'களிறு' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு தற்போது ரூ. 1.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை முறையாகப் பயன்படுத்தி யானை - மனித மோதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஓசை அமைப்பின் காளிதாஸ் பேசுகையில், நாட்டிலேயே யானைகள் அதிகம் வாழும் பகுதிகளில் பிரச்னைக்குரிய பகுதியாக கோவை உள்ளது. கோவையில் கடந்த 1994 முதல் 2004 வரை விலங்கு - மனித மோதலில் 23 பேர் பலியானார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 99-ஆக உயர்ந்தது. யானைகளின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது என்றார்.
கெளரவ வன உயிரினக் காப்பாளர் பத்ரசாமி பேசும்போது, யானைகள் ஹிந்து சமயத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. ஆனால், வனப் பகுதிகளை விட்டு கோயில்களில் வைத்துப் பராமரிக்கப்படும் யானைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதால், அவற்றை மீட்டு வனங்களில் வைத்துப் பராமரிக்க வேண்டும் என்றார்.
மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிசாமி பேசும்போது, கோவையில் யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் அவை ஊருக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலமாக யானைகளையும், மனிதர்களையும் பாதுகாக்க முடியும் என்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தின் கூடுதல் இயக்குநரும், தலைமை வனப் பாதுகாவலருமான கே.கே.கெளஷல் பேசும்போது, இந்தியாவில் ஒருகாலத்தில் 47 ஆயிரமாக இருந்த யானைகளின் எண்ணிக்கை தற்போது 25 ஆயிரமாக குறைந்துள்ளது. காடுகளும், விலங்குகளும் இல்லை என்றால் மனிதர்களும் இல்லை என்பதை உணர்ந்து, அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், யானைகள் வனப் பகுதிகளில் இருந்து ஊருக்குள் நுழைந்தால் அதுகுறித்து வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வசதியாக அவசர உதவி எண் (1800 4254 5456) தொடங்கப்பட்டது.
மேலும், அண்மையில் யானை தாக்குதலில் காயமடைந்த வேட்டைத் தடுப்புக் காவலர் கார்த்திகேயனுக்கு, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சார்பில் ரூ. 21 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. அத்துடன், வனத் துறை நண்பர்கள் எனும் புதிய திட்டத்தில் இணைந்தவர்களுக்கு அடையாள அட்டைகள், வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு ரூ. 1 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு வசதிக்கான அட்டைகள், சீருடை, காலணி போன்றவையும் வழங்கப்பட்டன.
கார்பைடு துப்பாக்கி
ஊருக்குள் நுழையும் யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணியின்போது கோவை வனத் துறையினர் பட்டாசுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பட்டாசுகளுக்கு பதிலாக கார்பைடு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கால்சியம் கார்பைடு ரசாயனத்தை தண்ணீருடன் சேர்க்கும்போது வெளியாகும் அசிட்டிலின் வாயு, தீப்பொறி பட்டதும் வெடிச் சப்தம் ஏற்படும். இதை விலங்குகளை விரட்டப் பயன்படுத்த முடியும் என்பதை மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சி மூலமாக அறிந்து கொண்ட கேரளத்தைச் சேர்ந்த சி.அனு தாமஸ், பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினருடன் இணைந்து அதை கார்பைடு துப்பாக்கியாக வடிவமைத்துள்ளார்.
இந்த வகை துப்பாக்கிகள் கூடலூர் பகுதியில் பயன்பாட்டில் இருந்தாலும், ஒரே முறையில் மருந்தைச் செலுத்தி அதிக முறை வெடிக்கும் வகையில் அது மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதை நவீன தொழில்நுட்பத்துக்கு உள்படுத்த முடியுமா என்பது குறித்து பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக வனப் பாதுகாவலர் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த வகை துப்பாக்கியை வடிவமைக்கவும், பயன்படுத்தவும் அதிகபட்சம் ரூ. 900 மட்டுமே ஆகும். இதற்கு தனியாக நிதி ஒதுக்கீடு இல்லாத நிலையில், தற்போது வந்துள்ள கார்பைடு துப்பாக்கி பெரிதும் பயன்படும் என்று வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com