டீசலுக்கான நிதி கிடைக்காததால் இலவச அமரர் ஊர்தி சேவை பாதிப்பு

டீசலுக்கு தேவையான நிதி ஒதுக்காததால் கோவை அரசு மருத்துவமனையில் இயக்கப்பட்டு வந்த இலவச அமரர் ஊர்தி சேவை

டீசலுக்கு தேவையான நிதி ஒதுக்காததால் கோவை அரசு மருத்துவமனையில் இயக்கப்பட்டு வந்த இலவச அமரர் ஊர்தி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சடலங்களை எடுத்துச் செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை எடுத்துச் செல்ல பொதுமக்களிடம் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆயிரக்கணக்கில் வசூலித்து வந்தனர். இதனால், ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழக்கும் சடலங்களை இலவசமாக எடுத்துச் செல்ல சில ஆண்டுகளுக்கு முன்னர் இலவச அமரர் ஊர்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் அமரர் ஊர்தித் திட்டம் தமிழக சுகாதாரத் திட்டத்தின்கீழ் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், கோவை அரசு மருத்துவமனையில் 9 ஊர்திகளும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒரு ஊர்தியும் இயக்கப்படுகிறது. இதில், பல்வேறு வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் கோவை அரசு மருத்துமனையில் உயிரிழந்தாலும் அவர்களது சொந்த ஊருக்கு இலவசமாக சடலம் எடுத்துச்செல்லப்படும். இதேபோல, அருகில் உள்ள கேரள மாநிலம், பாலக்காடு வரையிலும் இலவச அமரர் ஊர்தி சேவை அளிக்கப்படுகிறது.
கோவை அரசு மருத்துவமனையில் இருந்து மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக 30 சடலங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த ஊர்திகளுக்குத் தேவையான டீசலுக்கு தமிழக அரசின் மூலமாக நிதி ஒதுக்கப்பட்டு செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக அமரர் ஊர்திக்குத் தேவையான டீசலுக்கான நிதி செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் அளிக்கப்படாததால் அமரர் ஊர்தி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உயிரிழந்த நபர்களின் சடலங்களை அவர்களது உறவினர்கள் புதன்கிழமை மாலை முதல் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாகத் தங்களது ஊர்களுக்கு எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து, அரசு மருத்துவமனை நிர்வாகம் தலையிட்டு அமரர் ஊர்திகளுக்கு வியாழக்கிழமை மட்டும் டீசல் கிடைக்க நடவடிக்கை எடுத்தது. இதனால் ஒரு சில சடலங்களைத் தவிர அனைத்து சடலங்களும் அமரர் ஊர்தி மூலமாக கொண்டு செல்லப்பட்டன.
ஆனால், செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக கிடைக்க வேண்டிய நிதி வெள்ளிக்கிழமையும் கிடைக்காததால் பெரும்பாலான சடலங்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டன.
பின்னர், செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக வெள்ளிக்கிழமை மாலையிலேயே நிதி கிடைக்கப் பெற்று அதன்பின்னரே இலவச அமரர் ஊர்தி மூலமாக சடலங்கள் கொண்டு செல்லப்பட்டன.
ஏழை மக்கள் பயன்பெறும் நோக்கில் அரசு கொண்டு வந்த அமரர் ஊர்தித் திட்டத்தை அலட்சியம் காரணமா செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் முறையாக செயல்படுத்தாததால் கோவை அரசு மருத்துமனையில் இருந்து சடலங்களைக் கொண்டு செல்ல ஏழை மக்கள் பல ஆயிரங்களை செலவழிக்கும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com