அதிமுக பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட  பிளக்ஸ் பேன்ர்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. 

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மாநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட  பிளக்ஸ் பேன்ர்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. 
தமிழக அரசு சார்பில்  கோவையில் டிசம்பர் 3-ஆம் தேதி எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்காக மாநகர் முழுவதும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் அதிமுக சார்பில் பிளக்ஸ் பேனர்கள், கட்-அவுட்டுகள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. 
 இந்நிலையில், அவிநாசி சாலையில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பொறியாளர் ரகுபதி அதன் மீது மோதி உயிரிழந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தன்னார்வ அமைப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.   ஆனால், லாரி மோதியதால்தான் அவர் இறந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 இச் சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.கார்த்திக், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், மாநகரில் அனுமதி இல்லாமலும், விதிமுறைகளை மீறியும் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள், கட்-அவுட்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
 வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மாநகரில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களையும், அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தால் அதையும் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
 இதையடுத்து, மாநகரில் ஆங்காங்கே வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை சம்பந்தப்பட்டவர்கள் வியாழக்கிழமை அகற்றத் தொடங்கினர். ஆனாலும், பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படவில்லை. மேலும், அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களும் அகற்றப்பட்டவில்லை.
 இதில், நீதிமன்ற உத்தரவின் நகல் தங்களுக்குக் கிடைத்தவுடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
மேலும், மாநகரில் முறையாக எவ்வளவு எண்ணிக்கை பேனர்கள் வைக்க மாநகராட்சியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
7 பேர் கைது: கோவை -அவிநாசி சாலையில் ஜி.டி.அருங்காட்சியகத்தை அடுத்த பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அங்கு வந்தவர்கள் அலங்கார வளைவுகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார் 4 பெண்கள் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com