பாபர் மசூதி இடிப்பு தினம்:  கோவையில் இஸ்லாமியர்கள் போராட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி மனிதநேய ஜனநாயக கட்சியினர் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதன்படி கோவையில் அக்கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டத்துக்கு அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீத் தலைமை வகித்தார். அப்போது,  பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் விரைந்து வழங்கவேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து,  ரயில் மறியலுக்கு முயன்ற 231 பேரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் தடுத்தி நிறுத்திக் கைது செய்தனர். 
இந்தப் போராட்டத்தில்,  அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் டி.எம்.எஸ்.அப்பாஸ்,  மாவட்டச் செயலாளர் எம்.எச்.அப்பாஸ், மாவட்டப் பொருளாளர் ஏ.டி.ஆர்.பதுரூதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
தமுமுக ஆர்ப்பாட்டம்:  பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி , தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கறுப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமுமுக கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் என்.இப்ராஹிம் தலைமை வகித்தார். இதில் பங்கேற்றவர்கள் கூறுகையில், "பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்' என்றனர்.
இதில்,  மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ஜெம் பாபு,  மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.சாதிக்,  தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் சுசி கலையரசன் உள்ளிட்ட 1,000 பேர் பங்கேற்றனர்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் 178 பேர் கைது:  கோவை விமான நிலையத்தை முற்றுகையிட ஊர்வலகமாகச் சென்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்களை கொடிசியா அருகே பீளமேடு போலீஸார் தடுத்து நிறுத்தினர். இந்தப் போராட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் இஸ்மாயில் தலைமை வகித்தார். இதில் 78 பெண்கள் உள்பட 178 பேர் கைது செய்யப்பட்டனர்.  
எஸ்.டி.பி.ஐ.ஆர்ப்பாட்டம்: பாபர் மசூதி இடிப்புக்கு நீதி கோரி எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆத்துப்பாலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு,  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் எ.அன்வர் ஷெரீப் தலைமை வகித்தார். 
இதில், கோவை மண்டல தலைவர் எ.முஸ்தபா,  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம்.இப்ராஹிம்,  நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் சர்மிளா பானு,  விமன்ஸ் மூவ்மெண்ட் மாநிலச் செயலாளர் பர்சானா பானு,  தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட 650 பேர் பங்கேற்றனர். 
பிஎஸ்என்எல் அலுவலகம் முற்றுகை: இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை குனியமுத்தூரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை இந்திய தேசிய லீக் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.  அப்போது அங்கிருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரைக் கைது செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com