வெளிநாட்டு வர்த்தக கொள்கையால்  போக்குவரத்து, பரிவர்த்தனை செலவுகள் குறையும்: சைமா

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வெளிநாட்டு வர்த்தக கொள்கையால் போக்குவரத்து மற்றும் பரிவர்த்தனை செலவுகள் குறையும் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் பி.நடராஜ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வெளிநாட்டு வர்த்தக கொள்கையால் போக்குவரத்து மற்றும் பரிவர்த்தனை செலவுகள் குறையும் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் பி.நடராஜ் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 உற்பத்தித் துறையை மேம்படுத்தி உலக அளவில் போட்டியிட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் ஜவுளித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 
 இந்நிலையில்,  மத்திய வணிகவரித் துறை 2015-2020-க்கான வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை அறிவித்துள்ளது. 
இதில் தொழில் மற்றும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது,  எல்லை கடந்த வணிகத்தை எளிதாக்குவது,  புதிய ஏற்றுமதி சந்தைகளை ஆராய்தல்,  புதிய ஏற்றுமதி பொருள்கள்,  செயல்முறைகளை எளிதாக்குவது போன்றவற்றை கருத்தில் கொண்டு தேசிய வர்த்தக எளிதாக்கல் குழு ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி அதிகரிக்கும்.
 நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்திய பின்பு ஏற்றுமதியாளர்களுக்கு போக்குவரத்து மற்றும் பரிவர்த்தனை செலவுகள் கணிசமாக குறைந்துள்ளது. 
தேசிய வர்த்தக எளிதாக்கல் குழுவால் வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்பம், செயல்முறைகளை எளிதாக்கல், கட்டமைப்பை அதிகரித்தல், 19 துறைமுகங்கள் மற்றும் 17 விமான சரக்கு வளாகங்களில் 24 மணி நேர சுங்க அனுமதி வசதி ஆகியவை ஏற்றுமதியாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
பருத்தி நூல் ஏற்றுமதியை எம்.ஈ.ஐ.எஸ் மற்றும் ஐ.ஈ.எஸ். ஏற்றுமதி சலுகைகளில் உட்படுத்துதல்,  துணி ஏற்றுமதிக்கு ஆர்.ஓ.எஸ்.எல். சலுகை உட்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். 
இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் பட்சத்தில் அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் மற்றும் அதிக மூலதனம் செய்யப்பட்டுள்ள நூற்பாலை, நெசவு, பின்னலாடை மற்றும் துணி பதனிடுதல் துறைகளில் இருக்கும் உபரி உற்பத்தி கொள்ளளவுகளை பயன்படுத்த உதவும்.
 மேலும்,  முன்கூட்டியே உரிமம் வழங்கும் திட்டம் மற்றும் இ.பி.சி.ஜி. திட்டத்தின் கீழ் இந்தியாவில் வாங்கும் பொருள்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 
ஜி.எஸ்.டி. செயல்படுத்துவதற்கு முன்பு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு ஜவுளிப் பொருள்களுக்கு கிடைத்து வந்த மொத்த சலுகைகளும் கிடைக்கும் வகையில் ஊக்கத் தொகை(டியூட்டி டிராபேக்) விகிதங்களை அதிகரித்து வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com