திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம்: ஆட்சியர்கள் அமல்படுத்த கோரிக்கை

திரையரங்க வாகன நிறுத்துமிடங்களுக்கு (பார்க்கிங்) அரசு கட்டணம் நிர்ணயித்துள்ள நிலையில்,  அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று

திரையரங்க வாகன நிறுத்துமிடங்களுக்கு (பார்க்கிங்) அரசு கட்டணம் நிர்ணயித்துள்ள நிலையில்,  அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த கன்ஸ்யூமர் காஸஸ் நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் செயலர் கே.கதிர்மதியோன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
எங்களது தொடர் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து திரையரங்கு வாகன நிறுத்துமிடத்துக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது.  அதன்படி,  மாநகராட்சிகள்,  சிறப்பு நிலை நகராட்சிகளில் கார்,  மூன்று சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும்,  இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்,  நகராட்சிகள்,  இதர நிலை நகராட்சிகளில் கார்,  மூன்று சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும்,  இருசக்கர வாகனங்களுக்கு 7 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
பேரூராட்சி,  ஊராட்சிகளில் கார்,  மூன்று சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 3 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அனைத்துப் பகுதிகளிலும் மிதிவண்டிகளுக்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,  இந்த திருத்தி அமைக்கப்பட்ட கட்டணம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அரசு கூறியிருந்தாலும், எந்த திரையரங்கிலும் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
அதேபோல,  திரையரங்குகள் அரசு விதிகளை பின்பற்றுகின்றனவா என்பதை அரசு நிர்வாகமும் கண்காணிக்கத் தவறிவிட்டது. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த உத்தரவு வெளியான மறுநாளே எல்லா திரையரங்குகளிலும் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டது.
ஆனால், வாகன நிறுத்துமிட கட்டணம் குறைத்து அறிவிக்கப்பட்ட நிலையில், அதை எந்தத் திரையரங்க நிர்வாகமும்,  மல்டிபிளக்ஸ்,  திரையரங்கு உள்ள வணிக வளாகங்களும் பின்பற்றவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அரசு பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்க நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com