தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்து வருவதால் மக்களும் மாறிவிட்டனர்: கள் இயக்கம் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் நம்பகத் தன்மையை இழந்து வருவதால் வாக்காளர்களும் அதற்கேற்ப மாறிவிட்டனர் என்று தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் நம்பகத் தன்மையை இழந்து வருவதால் வாக்காளர்களும் அதற்கேற்ப மாறிவிட்டனர் என்று தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
 இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது:
 தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படுவதால், மக்களின் நம்பகத்தன்மையை படிப்படியாக இழந்து வருகிறது. ஆணையத்தின் மூளையாகவும், முதுகெலும்பாகவும் அரசு அதிகாரிகளே உள்ளனர். ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவே இவர்களில் பலர் உள்ளனர். தேர்தல் காலத்தில் தவறிழைக்கும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவதில்லை. திருமங்கலம் தேர்தலில் இருந்தே முறைகேடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் கள் இயக்கம் பெரும் சவாலை சந்திக்க வேண்டியுள்ளது.
 பணத்தையும், பரிசுப் பொருளையும் பெற்றுக் கொண்டு வாக்களிப்பது ஜனநாயகத்துக்கு அளிக்கப்படும் சாவு மணியாகும். இதற்கு இடையில் எத்தனை பேர் ஜனநாயகத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள், நியாயத்தின் பக்கம் நிற்கிறார்கள் என்பதை எடை போடுவதற்கே எங்களது வேட்பாளர் இல.கதிரேசன் களத்தில் நின்றுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், பதிவான வாக்குகளில் 0.2 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தால் அவர் போட்டியிட்டதன் காரணமாக ஏற்பட்ட கூடுதல் செலவை, அந்த வேட்பாளரே செலுத்த வேண்டும். மீறினால் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
 அப்படி இருந்திருந்தால் ஆர்.கே. நகர் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தைத் தாண்டியிருக்காது. தமிழ்நாட்டில் நீரா பானம் விற்பது குறித்து அரசு அறிவித்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு இல்லாமல் இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே அது வெற்றி அடையும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com