எட்டிமடையில் சாலை விரிவாக்கப் பணியால் குடிநீர் விநியோகம் பாதிப்பு: பொது மக்கள் அவதி

மதுக்கரையை அடுத்த எட்டிமடையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மதுக்கரையை அடுத்த எட்டிமடையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எட்டிமடை பிரிவிலிருந்து எட்டிமடை ரயில் நிலையம் வரை பிரதான சாலையை இருபுறமும் விரிவுபடுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி,  இருபுறமும் தலா 2 மீட்டர் விரிவுபடுத்தும் பணி, பாலம் அமைக்கும் பணி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 
இப்பணிகள் காரணமாக  எட்டிமடை ரயில் நிலையம் அருகில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகக் குழாய்கள் அகற்றப்பட்டு கடந்த நான்கு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில்  கூறப்படுகிறது. 
அப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால்,  ஆழ்துளைக் கிணறு அருகில் கழிவுநீர் தேங்கி இருப்பதால், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். 
மேலும்,  சாலையோரம் இருக்கும் வீடுகளை அகற்ற அங்கு வசிப்போருக்கு கடந்த  டிசம்பர் 4ஆம் தேதி கொடுக்க வேண்டிய நோட்டீஸை இறுதி நாளான டிசம்பர் 11ஆம் தேதி கொடுக்கப்பட்டதாகக் கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் க.க.சாவடி போலீஸார், நெடுஞ்சாலைத் துறை துணைப் பொறியாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலையோரத்தில் 50 ஆண்டுகள் பழமையான 7 புளியமரங்கள் உள்ளன. இவற்றை அப்புறப்படுத்தினால்,  வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக 5 மடங்கு கூடுதலான எண்ணிக்கையில் புதிய மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். மின் கம்பங்களை இடம் மாற்றம் செய்யும் பணியை மின்வாரியம் விரைந்து முடிக்க வேண்டும். திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் சாலையை அகலப்படுத்தி முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com