கோவை அருகே யானை தாக்கி மூதாட்டி சாவு: மற்றொரு பெண் படுகாயம்

கோவை மாவட்டம், பாலமலை வனப் பகுதியிலிருந்து உணவு தேடி பெரியநாயக்கன்பாளையத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் தாக்கி

கோவை மாவட்டம், பாலமலை வனப் பகுதியிலிருந்து உணவு தேடி பெரியநாயக்கன்பாளையத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் தாக்கி மூதாட்டி உயிரிழந்தார். மற்றொரு மூதாட்டி கோவை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலமலை வனப் பகுதிக்குள் இருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியேறிய காட்டுயானைகள் மலையடிவார கிராமங்களான கோவனூர், நாயக்கன்பாளையம், தேவையம்பாளையம் கிராமங்களில் இரவு நேரங்களில் சுற்றித்திரிந்தன.   நரசிம்மநாயக்கன்பாளையத்துக்கு அருகிலுள்ள தபால், தந்தி அலுவலகக் குடியிருப்பில் உள்ள நியாயவிலைக் கடையின் கதவை திங்கள்கிழமை நள்ளிரவு உடைத்து உணவுப் பொருள்களை சாப்பிட்டன.
இந்நிலையில்,  குட்டியுடன் இப்பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை மீண்டும் புகுந்த நான்கு யானைகள் கோவை- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையைக் கடந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள கோவிந்தநாயக்கன்பாளையத்துக்குள் புகுந்து சோளக் காட்டில் உள்ள பயிர்களை மேய்ந்தன.  அங்கிருந்து வையம்பாளையம் கிராமத்துக்குள்நுழைந்த யானைகள், அங்குள்ள சுதந்திரா பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிந்தன.
இந்நிலையில், குட்டியுடன் இரண்டு யானைகள் தனியாகப் பிரிந்து பெரியநாயக்கன்பாளையம் சத்யா நகருக்குள் புகுந்தன. யானைகள் வருவதைத் கண்ட பொதுமக்கள் வீடுகளுக்குள் பதுங்கினர். அப்போது,  சாலையில் சென்றுகொண்டிருந்த துளசியம்மாளை(60) யானை தூக்கி வீசியது. அப்போது,  அவரின் அலறல் சப்தத்தால் ஆண் யானை தனியாகப் பிரிந்து தென்னந்தோப்பில் நின்றுகொண்டது. குட்டியுடன் சென்ற பெண் யானை கஸ்தூரிபாளையத்துக்குள் புகுந்து, ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கல்லூரி கேட்டை உடைத்துக் கொண்டு உள்ள சென்றது. பின்னர், கல்லூரியின் சுற்றுச்சுவரை இடித்துத் தள்ளிய யானை சாமிசெட்டிபாளையம் தார் சாலையில் குட்டியுடன் சென்றது. வேட்டைத் தடுப்புக் காவலர்கள் வனத் துறை ஜீப்பில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களை எச்சரித்தபடி,  யானையை விரட்டிச் சென்றனர். 
அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த ராமாத்தாள் (80) என்பவரை யானை தூக்கி வீசியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், அந்த யானை தனியார் கல்லூரி பகுதி வழியாக குட்டியுடன் வனத்துக்குள் சென்றுவிட்டது.
இதற்கிடையில்,  தென்னந்தோப்பில் தனியாக நின்ற ஆண் யானை மீண்டும் ஜி.கே.டி பள்ளி பின்புறமுள்ள சோளக் காட்டுக்குள் புகுந்தது.வனத் துறையினர் இந்த யானையை வனப் பகுதிக்குத் துரத்திச் சென்றனர். 
இந்த யானை ரயில் பாதையைக் கடந்து பெ.நா.பாளையம் வித்யாலய வளாகத்திற்குள் புகுந்தது. பின்னர், செவித் திறன் குறைவுடையோர் பள்ளி வளாகத்துக்குள் சென்றது. வனத் துறையினர்  தொடர்ந்து விரட்டியதன் காரணமாக கெளசிகா நதியோரமாக வனத்தை நோக்கிச் சென்றது. 
அந்த யானை வனப் பகுதிக்குள் செல்வதற்கு வசதியாக  கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் தெற்குபாளையம் அருகில் சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. யானை சாலையைக் கடந்ததும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.அதனை வனத்துறையினர் பாலமலை அடிவாரம் வரை துரத்தி விட்டு வந்தனர்.இச்சூழலில் வையம்பாளையத்தில் பிரிந்த நான்காவது யானையானது செங்காளிபாளையம் கிராம தோட்டப்பகுதிக்குள் நின்றிருந்தது.அது மாலை 4 மணியளவில் புதுப்பாளையம் கிராமத்தில் ரயில்பாதை அருகே உள்ள சோளக்காட்டில் நின்றது.அதனை வனத்துறையினர் மெதுவாக வனப்பகுதிக்கு துரத்த முற்பட்டனர். அது நரசிம்மநாயக்கன்பாளையம் நகர்பகுதிக்குள் நுழைந்து கோவை மேட்டுப்பாளையம் சாலையை கடக்க முற்பட்டது.மீண்டும் கோவை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.பின்னர் யானை மெதுவாக சாலையைக் கடந்து பூச்சியூர் வழியாக வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது.
இந்த நான்கு காட்டு யானைகள் செய்த அட்டகாசத்தினால் 20க்கும் மேற்பட்ட கிராமத்து பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.  பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோளம் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளன.
இதன் சுவைமிகுந்த கதிர்களை உண்பதற்காக யானைகள் வரத்தொடங்கி விட்டன.ஆதலால் அடிவார கிராமங்களில் யானைகள் நுழையும் போதே அவற்றை காட்டிற்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.மனித உயிரிழப்புகளை இரவு நேரங்களில் பணியாளர்களை தீவிரதடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com