இன்றுமுதல் ஜி.எஸ்.டி அமல்: சோதனைச் சாவடிகள் மூடப்பட்டன

நாடு முழுவதிலும் சரக்கு,  சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்படுவதையொட்டி கோவை மண்டலத்தில் 6 சோதனைச் சாவடிகள் வெள்ளிக்கிழமை இரவுடன் மூடப்பட்டன.

நாடு முழுவதிலும் சரக்கு,  சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்படுவதையொட்டி கோவை மண்டலத்தில் 6 சோதனைச் சாவடிகள் வெள்ளிக்கிழமை இரவுடன் மூடப்பட்டன.
 ஒரே நாடு,  ஒரே வரி என்ற அடிப்படையிலான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அமலுக்கு வந்துள்ளது.  இதனால் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு விதமான வரி விதிப்புகள் முடிவுக்கு வந்துள்ளன. இதனால் அந்தத் துறைகளில் பணியாற்றி வருபவர்கள் வேறு பணிகளுக்கு மாற்றப்பட உள்ளனர்.
 அதன்படி,  கோவை மண்டல வணிகவரித் துறையின் கட்டுப்பாட்டில் தமிழகத்தை கேரளம்,  கர்நாடக மாநிலங்களுடன் இணைக்கும் வகையில் கோவை,  உதகை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் வாளையாறு, கே.ஜி.சாவடி,  பிச்சனூர், கோபாலபுரம்,  மீனாட்சிபுரம், கூடலூர் ஆகிய 6 சோதனைச் சாவடிகளும் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் மூடப்பட்டன.
  வழக்கமாக,  கொச்சி துறைமுகத்தில் இருந்து தமிழகத்துக்கும்,  வட மாநிலங்களுக்கும்,  வட மாநிலங்களில் இருந்து கொச்சி துறைமுகத்துக்கும் செல்லும் பல நூறு சரக்கு லாரிகள், வாளையாறு சோதனைச் சாவடியில் பல மணி நேரம் காத்துக் கிடக்கும்.
 இனி இந்த சோதனைச் சாவடிகள் செயல்படாது என்பதால் சரக்கு வாகனங்கள் விரைவில் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்றடையும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து கோவை வணிகவரித் துறை இணை ஆணையர் எஸ்.பி.அம்ரித் கூறும்போது,   ஜி.எஸ்.டி. வரி  அமலாவதையொட்டி அனைத்து சோதனைச் சாவடிகளையும் மூட  அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கோவை மண்டலத்தில் 6 சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன. இனி வாளையாறு உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நிற்காமல் செல்ல முடியும்.
 சோதனைச் சாவடிகள் செயல்படாது என்பதை அறிவிப்புப் பலகைகளாக வைக்கும்படி சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  சோதனைச் சாவடிகள் செயல்படாது என்றபோதிலும் அங்குள்ள அலுவலகங்கள் உடனடியாக காலி செய்யப்படமாட்டாது.  அவை நமது சொந்த கட்டடங்கள்தான்.
 அங்குள்ள கணினி உள்ளிட்ட இயந்திரங்கள், ஆவணங்கள் அனைத்தையும் கோவையில் உள்ள தலைமை அலுவலகங்களுக்கு கொண்டு வந்துவிடுவோம்.
  அங்கு பணியில் இருந்த ஊழியர்களுக்கு என்ன பணி ஒதுக்குவது என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வரவில்லை. சோதனைச் சாவடிகள் இருக்காது என்றபோதிலும் ரோந்துக் குழுக்கள் தொடர்ந்து செயல்படும். அதேநேரம் அடுத்த சில மாதங்களுக்கு அதாவது ஜி.எஸ்.டி. முழுமையாக அமலாகும் வரையிலும் ரோந்துக் குழுக்களுக்கும் வேலை  எதுவும் இருக்காது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com