கோவையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: பள்ளிகளில் காய்ச்சல் பாதிப்பு விவரம் சேகரிப்பு

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் காய்ச்சல் பாதித்த மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 7 பேர் பலியாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், மாநகரம், மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜா, சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், உதவிப் பயிற்சி ஆட்சியர் சரண்யா ஹரி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பேசியதாவது:  
டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு சார்ந்த அலுவலகங்களின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குடிநீர்த் தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் சுகாதாரத்தைப் பேணிக் காக்கவேண்டும். அனைத்து அலுவலகங்களையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து, சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒலிப்பெருக்கி, துண்டுப் பிரசுரங்கள் மூலமாகப் பிரசாரம் செய்யவேண்டும். டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசு, சுத்தமான நீரில் உருவாகக் கூடியது என்பதால் கொசுவை ஒழிப்பதன் மூலமாகவே டெங்குவை ஒழிக்க முடியும் என்பதை உணர வேண்டும். கிராமங்களில் பள்ளிக் குழந்தைகள் விடுமுறையில் இருந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். காய்ச்சல் காரணமாக விடுமுறையில் இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்த வேண்டும் என்றார்.
பள்ளிகளில் விவரம் சேகரிப்பு
இதற்கிடையே, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு பாதிப்பு உள்ளதா எனும் விவரத்தை ஆசிரியர்கள் மூலமாக சேகரிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக S​C​H​O​O​L​M​O​N​I​T​O​R​I​N​G​D​E​N​G​U​E@​G​M​A​I​L.​C​OM எனும் மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்தப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, வகுப்பில் காய்ச்சல் உள்ள மாணவர்கள், காய்ச்சல் காரணமாக விடுப்பு எடுக்கும் மாணவர்களின் பெயர், விவரம், முகவரியை தினசரி காலை 11 மணிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
தொடர்ந்து, அந்த விவரங்கள் சுகாதாரத் துறைக்கு அனுப்பப்படும். இதன் மூலமாக, பாதிக்கப்பட்ட மாணவரை தேடிச் சென்று சிகிச்சை அளிக்குமாறு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு உத்தரவிடப்படும். இந்தத் திட்டத்தை அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தவறுபவர்கள் உரிய விளக்கம் அளிக்க நேரிடும் என்று பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com