நிறைவடைந்தது வேளாண் கண்காட்சி: ரூ.160 கோடிக்கு வர்த்தக விசாரணை

கோவையில் நடைபெற்ற வேளாண் வணிகக் கண்காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது.

கோவையில் நடைபெற்ற வேளாண் வணிகக் கண்காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது. இந்தக் கண்காட்சிக்கு 1.70 லட்சம் பார்வையாளர்கள் வந்ததாகவும்,  ரூ. 160 கோடிக்கு வர்த்தக விசாரணை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் (கொடிசியா), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில்  அக்ரி இன்டெக்ஸ் 2017 எனும் வேளாண் வணிகக் கண்காட்சி ஜூலை 14-ஆம் தேதி தொடங்கியது.
17-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் வெளிநாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 400 அரசு, தனியார், அரசு சார்ந்த நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றன.
விவசாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துதல் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், சூரிய ஒளி பம்புகள், துல்லியப் பண்ணை, பண்ணை இயந்திரமயமாக்கல், மண்ணில்லா விவசாயம், தானியங்கி முறைகள், மதிப்புக் கூட்டுப் பொருள்கள், அறுவடைக்குப் பின் தொழில்நுட்பம், வேளாண் சந்தை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அரங்குகள், தொழில்நுட்பங்கள், கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும் இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக கோவை இந்தியத் தொழில் வர்த்தக சபையுடன் இணைந்து உழவே தலை எனும் தலைப்பில் இயற்கை விவசாயம் தொடர்பான சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது. கண்காட்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் வந்து சென்றனர்.
இறுதி நாளான வெள்ளிக்கிழமையும் பார்வையாளர்களின் கூட்டம் அலைமோதியது. இந்தக் கண்காட்சிக்கு 4 நாள்களிலும் 1.70 லட்சம் பார்வையாளர்கள் வந்து சென்றிருப்பதாகவும், ரூ. 160 கோடிக்கு வர்த்தக விசாரணை நடைபெற்றதில், ரூ. 100 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று கருதுவதாகவும் கண்காட்சித் தலைவர் ஆர்.செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com