பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில்  நோய் எதிர்ப்பு மருந்து செலுத்திய குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு

கோவை மாவட்டம்,  பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோய் எதிர்ப்பு மருந்து (ஆன்டிபயாடிக்) செலுத்திய குழந்தைகளுக்கு  உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம்,  பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோய் எதிர்ப்பு மருந்து (ஆன்டிபயாடிக்) செலுத்திய குழந்தைகளுக்கு  உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் காரணமாக  30 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழந்தைகளுக்கு  மருத்துவரின் பரிந்துரைப்படி, நோய் எதிர்ப்பு மருந்தை செவிலியர்கள் ஊசி மூலம்  ஞாயிற்றுக்கிழமை இரவு செலுத்தினர்.
இந்த மருந்து செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையைச் சேர்ந்த கார்த்திகேயனின் மகன் ஹனிஷ் (5),  பொள்ளாச்சியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் உதயகுமார் (11), வள்ளியம்மாள் லே-அவுட்டை சேர்ந்த முருகானந்தத்தின் மகன் குரு (10), ராமபட்டினத்தைச் சேர்ந்த பாபுவின் மகள் அனுதீபிகா (7),  மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியத்தின்  மகன் மணிகண்டன் (5) உள்ளிட்ட 15 குழந்தைகளுக்கு நடுக்கம், வலிப்பு ஏற்பட்டது.
இதையறிந்த,   மருத்துவர்களும்,  செவிலியர்களும் குழந்தைகளுக்கு மாற்று மருந்து செலுத்தியதாகத் தெரிகிறது.  இதைத் தொடர்ந்து, அவர்கள் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.
இதில்,  உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜாபர் என்ற 9 மாதக் குழந்தை உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து  பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளர்(பொறுப்பு) கலைச்செல்வி கூறியதாவது:
நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்ட குழந்தைகளுக்கு குளிர்க் காய்ச்சலுடன் நடுக்கம் ஏற்பட்டது.  இந்த மருந்து குழந்தைகளுக்குச் சேரவில்லை.  இதைத் தொடர்ந்து,  மாற்று மருந்து கொடுத்ததால் அவர்கள் நல்ல உடல் நிலையில் உள்ளனர். இந்த மருந்துகள் சோதனைக்காக கோவைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார்.
செவிலியர்கள் பணியிடை
நீக்கம்: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மருத்து செலுத்திய விவகாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பணியில் இருந்த செவிலியர்கள் செல்வி, புளுரின்டயானா ஆகிய இருவரும் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com