மனிதனின் சிந்தனையை சீர்படுத்தும் ஆற்றல் நூல்களுக்கு உண்டு: மருதாசல அடிகளார்

மனிதனின் சிந்தனைகளைச் சீர்படுத்தும் ஆற்றல் நூல்களுக்கு உண்டு என பேரூராதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகளார் தெரிவித்தார்.

மனிதனின் சிந்தனைகளைச் சீர்படுத்தும் ஆற்றல் நூல்களுக்கு உண்டு என பேரூராதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகளார் தெரிவித்தார்.
விஜயா பதிப்பகம் சார்பில் வாசகர் திருவிழா மற்றும் புத்தகக் கண்காட்சி திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கண்காட்சியைத் தொடக்கிவைத்து   மருதாசல அடிகளார் பேசியதாவது:
சோலையைத் தேடி பறவைகள் செல்வது போலவும், மலர்களைத் தேடி தேனீக்கள் செல்வது போலவும் புத்தக நிலையங்களை நோக்கி வாசகர்கள் செல்லவேண்டும்.
உலக வரலாற்றை மாற்றி அமைத்த வலிமை நூல்களுக்கு உண்டு. நூல்களால்தான் ஜெர்மன் மற்றும் பிரெஞ்ச் புரட்சிகள் நடைபெற்றன.
டால்ஸ்டாயின் நூலைப் படித்து பின்னர்தான் காந்தி, மகாத்மாவாக மாறினார். மனிதன் சுவாசிக்கும் பிராணவாயு எவ்வாறு ரத்தத்தைச் சீர்படுத்துகிறதோ அதுபோல மனிதனின் சிந்தனையை சீர்படுத்தி, ஒருமைப்படுத்தும் ஆற்றல் நூல்களுக்கு உண்டு. தற்போது உள்ள காலச் சூழலில் யாரும் நூலகத்தைத் தேடிப் போவது இல்லை. எனவே, குழந்தைகளுக்கு நூல்களை வழங்கிப் படிக்க வைக்க வேண்டும் என்றார்.
 ஓம்சக்தி இதழ் இணை ஆசிரியர் பெ.சிதம்பரநாதன்:
 முதலில், மனிதன் தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்வது அவசியம். ஆனால், மனிதர்கள் அவ்வாறு செய்வதில்லை. ஒருமுறை விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து இயந்திர மனிதனை உருவாக்கினார்கள். அந்த இயந்திர மனிதன் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்தது. எனவே, மனித இனத்துடன் இயந்திர மனிதனை சேர்த்துவிடலாம் என அனைவரும் முடிவெடுத்தனர்.
அப்போது குறுக்கிட்ட ஒருவர் இயந்திர மனிதனிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். அதில் உனக்குப் பொய் பேசத் தெரியுமா என்றார். ஆனால், தனக்குப் பொய் பேசத் தெரியாது என இயந்திர மனிதன் பதிலளித்தான். அப்போது, பொய் சொல்லத் தெரியாத உன்னை எப்படி மனித இனத்துடன் சேர்த்துக் கொள்ள முடியும் என பெர்னார்ட் ஷா கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற பொய்களால்தான் மனிதச் சமூகம் சூழப்பட்டுள்ளது. அந்தப் பொய்யைத் தகர்க்கவே படைப்பாளிகள் போராடி வருகின்றனர் என்றார்.
பேராசிரியர் இராம. இருசுப்பிள்ளை:
தொல்காப்பியத்தில் அனைத்து வார்த்தைகளும் பொருள் கொடுப்பவை. சங்க நூல்களைப் படிக்கும்போது அதன் உள்பொருள்களை ஆராய்ந்தால் தமிழர்களின் பெருமைகளை நாம் அறிந்து கொள்ளமுடியும். இப்போது, தமிழர்களின் நிலையை காணும்போது கவலை அளிக்கிறது.  புத்தகத்தைப் புரட்டும்போது மனிதர்களால் புதுமைகளைப் படைக்க முடியும் என்றார். இந்நிகழ்ச்சியில், விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம்,  காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி, எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com