ரயில் பயணிகளிடம் நகை திருடிய இளைஞர் கைது: 10 பவுன் நகை, 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ரயில் பயணிகளிடமிருந்து நகைகளைத் திருடிய மதுரையைச் சேர்ந்த இளைஞரை கோவை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 பவுன் நகை மற்றும் 3 இருசக்கர வாகனங்களை  பறிமுதல் செய்தனர்.

ரயில் பயணிகளிடமிருந்து நகைகளைத் திருடிய மதுரையைச் சேர்ந்த இளைஞரை கோவை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 பவுன் நகை மற்றும் 3 இருசக்கர வாகனங்களை  பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது:
  திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவு  ரயில் ஜூலை 7-ஆம் தேதி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் ஈரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த பயணி ஒருவரிடமிருந்து 10 பவுன் நகை மற்றும் அடையாள அட்டைகளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.  இதுகுறித்து, ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
   இதனிடையே, கோவை ரயில் நிலைய நடைமேடையில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய நபரைப் பிடித்து ரயில்வே போலீஸார் விசாரித்தனர்.  அதில் அவர், மதுரை மாவட்டம், குறவக்குடியைச் சேர்ந்த அஜித்குமார் (23) என்பதும்,  திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணியிடம் ஜூலை 7-ஆம் தேதி நகை திருடியதும் தெரியவந்தது.  மேலும், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரயில் பயணிகளிடம் நகை திருடியதாக சுமார் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
   இதையடுத்து, அஜித்குமாரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 10 பவுன் நகை மற்றும் அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
 மேலும் அவரிடம் இருந்து கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ஆகிய இடங்களில் திருடிய 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
 இரவு நேரங்களில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது உடைமைகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி ரயில்வே போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.  
 மேலும், ரயில்களில் ஏற்படும் குற்றச் சம்பவங்கள் குறித்து இருப்புப் பாதை காவல் உதவி மையத்தை 1512 என்ற தொலைபேசி எண்ணிலும், 99625-00500 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com