வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

கோவையை அடுத்த வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  

கோவையை அடுத்த வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  
கோவையை அடுத்த வெள்ளலூரில் மாநகராட்சிக்குச் சொந்தமான 238 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு,  கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் சுமார் 800 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன.  இதில்,  மக்கும் குப்பைகள்,  மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில்,  இந்தக் குப்பைக் கிடங்கில் இருந்து திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில் புகை கிளம்பியது. இதன் பிறகு சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவத் தொடங்கியது.
 இதுகுறித்து அறிந்த கோவை தெற்கு,  வடக்கு,  கவுண்டம்பாளையம்,  பீளமேடு,  பல்லடம் ஆகிய பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் குப்பைக் கிடங்குக்கு கொண்டு வரப்பட்டன.
 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  எனினும்,  தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தீயை அணைக்கும் பணியில் வெள்ளலூரில் உள்ள அதிரடிப் படை வீரர்களும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது:
வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பரவிய தீயை அணைக்கும் பணியில்  பல்லடத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.  தீ  விடாமல் எரிவதால் அதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. கடந்த சனிக்கிழமை கூட இதே கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com