"புதிய அணு உலைக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடுவேன்'
By DIN | Published on : 20th June 2017 07:05 AM | அ+அ அ- |
தமிழகத்தில் அமைய உள்ள புதிய அணு உலைக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடுவேன் என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் உதயகுமார் கூறினார்.
கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத் தொழிலாளர்கள், தில்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடந்த மாதம் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனையடுத்து வேலைக்கு வராத 840 தொழிலாளர்களின் 8 நாள் சம்பளத்தை நிர்வாகம் பிடித்துக் கொண்டது. இதனைக் கண்டித்து 16 பேர் தொழிற்சாலை அருகில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கலந்து கொண்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் உதயகுமார் போராட்டத்தை ஆதரித்து பேசினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூடங்குளம் 3, 4-ஆவது அணு உலைக்கு எதிராக போராடிய மக்களை மத்திய அரசு அவமதித்து விட்டது. மக்களின் எதிர்ப்பையும் மீறி 6-ஆவது அணு உலைக்கு ரஷியாவுடன் மோடி ஒப்பந்தம் செய்துள்ளார். புதிய அணு உலைக்கு எதிராக விரைவில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.