நிதி நிறுவன மோசடி: 23 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கில் 23 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை, டான்பிட் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.  

தனியார் நிதி நிறுவன மோசடி வழக்கில் 23 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை, டான்பிட் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.  
 சேலம் மாவட்டம், மேட்டூர் அணை, ஸ்கொயர் மார்க்கெட் பகுதியில் மேட்டூர் காவேரி, ஸ்ரீகாவேரி, அன்னை காவேரி என மூன்று நிதி நிறுவனங்கள் 1990-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தன.
 இதில், மேட்டூர் காவேரி நிறுவனத்தில் மேட்டூர் அணைப் பகுதியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி (67), கோபால் (67), பாஸ்கரன் (52), அக்பர் அலி (66), அருணாசலம் (60), பச்சையப்பன் (79), சுசீலாதேவி (59), சிவகுமார் (47), ஜெயராமன் (73) ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர்.
 அன்னை காவேரி நிறுவனத்தில் மரகத மீனாட்சி (58), ரங்கசாமி (74), சரோஜா (65), மருதாசலம் (51), கருணாநிதி (67), தவமணி (57), லிங்கேஸ்வரி (67) ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர்.  ஸ்ரீகாவேரி நிறுவனத்தில் அதேபகுதியை சேர்ந்த சந்திரா (67), காளியாம்மாள் (76), நல்லம்மாள் (67), முகமது அனீபா (68), கனகராஜ் (47), விஜயமுத்துராமன் (44), பார்த்திபன் (49), ராமசாமி ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர்.
 இந்த மூன்று நிறுவனங்களிலும் 15 சதவீதம் வட்டி தருவதாகக்கூறி, 158 பேரிடம் ரூ. 3 கோடியே 9 லட்சத்து 35 ஆயிரத்து 925 வசூலித்துள்ளனர். ஆனால், குறிப்பிட்டபடி வட்டியுடன் சேர்த்துப் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
 இதுகுறித்து, கொளத்தூர், குருமூர்த்தி நகரைச் சேர்ந்த பழனியப்பன் மகன் மணி சேலம் பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் 2008 டிசம்பர் 1-ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.
 அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் நிதி நிறுவனங்களின் பங்குதாரர்கள் 24 பேரைக் கைதுசெய்தனர்.
 இந்த வழக்கு கோவை, டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்று வந்த காலத்தில் ஸ்ரீகாவேரி நிறுவனப் பங்குதாரர் ராமசாமி இறந்து விட்டார்.  
 இந்நிலையில், வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 23 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட 3 நிதி நிறுவனங்களுக்கும் ரூ. 1 கோடியே 44 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்தார்.
 அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓர் ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். மேலும், மூன்று நிறுவனங்களும் இழப்பீடாக தமிழக அரசுக்கு ரூ. 31 லட்சத்து 60 ஆயிரமும், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு ரூ. 1 கோடியே 4 லட்சமும் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த நிதி நிறுவனப் பங்குதாரர்கள் 23 பேரும் கைது செய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com