ரூ. 15 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீட்டுக் கழகம் கடனுதவி: ஆட்சியர் த.ந.ஹரிஹரன்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலமாக ரூ. 15 ஆயிரத்து 785 கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலமாக ரூ. 15 ஆயிரத்து 785 கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் ஜூன் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள விழாவைத் தொடக்கிவைத்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பேசியதாவது:
 தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் புதிதாகத் தொழில் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்தவும், நவீனமயமாக்கவும் கடன் வசதி அளிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலம், கட்டடம் மற்றும் இயந்திரத் தளவாடங்கள் வாங்குவதற்கு குறைந்த வட்டியில், நீண்ட காலக் கடன் அரசு மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் நிறுவனத்தின் மூலமாகக் கடன் பெற்று, தவணைத் தொகையைத் தவறாமல் செலுத்தி வரும்பட்சத்தில் தமிழக அரசின் சிறப்பு வட்டி மானியமாக 3 சதவீதம் அளிக்கப்படுகிறது. 2017 மார்ச் வரை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 352 நிறுவனங்களுக்கு ரூ. 15 ஆயிரத்து 785 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதில், கடன் பெற்றவர்கள் 40 சதவீதம் பேர் முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆவர். நிறுவனத்தின் கிளை அலுவலகங்களில் புதிய தொழில்களுக்கு ரூ. 75 லட்சம் வரையில் கடன்கள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும் புதிய தொழில்களுக்கு ரூ. 2 கோடி வரையிலும், மண்டலக் கடன் வழங்கும் குழுக் கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.
இதையடுத்து ரூ. 30 கோடி வரை உள்ள கடன்களுக்குத் தலைமை அலுவலகத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. தனி உரிமையாளர் அல்லது பங்குதாரர் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 15 கோடி வரையிலும், தனியார் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 30 கோடி வரையிலும் நீண்டகாலக் கடன் வழங்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் மூலமாகப் பொதுவாக சிறு மற்றும் குறு தொழில் நிறுவன நிதி உதவித் திட்டம், சாதன நிதி உதவித் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், நவீன அரிசி ஆலைகள் உற்பத்தி நிறுவனங்களுக்கான நடைமுறை மூலதனத் திட்டம், போக்குவரத்து வாகனக் கடன் திட்டம், மின் ஆக்கி கடன், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், விடுதிகள் திட்டம், காற்றாலைத் திட்டம், பண்டக சாலைத் திட்டம், கல்யாண மண்டபம் மற்றும் வணிக வளாகம் திட்டம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கான நிதி உதவித் திட்டம் என 14 வகையான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முதன்முதலில் தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்க அவர்களிடம் இருந்து குறைந்த மூலதனத்தையும், சிறிய அளவிலான துணைப் பிணையமும் பெற்று நீண்ட காலத் தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த இந்நிறுவனம் உதவுகிறது.
மேலும், தொழில் தொடங்குபவர்களுக்கு மானியத் தொகையை விரைவில் பெற்று வழங்கி வருகிறது. அரசு மானியத்தைப் பெறும் காலம் வரையில் இடைகாலத்துக்கு மானியக் கடன் சேர்த்து வழங்கப்படுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகப் பொது மேலாளர் கிருபாகரன், மண்டல மேலாளர் கந்தசாமி, கிளை மேலாளர்கள் மனோகரன், தினகரன், மாவட்டத் தொழில் மைய மேலாளர் அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com