மாற்றுப் பணி கோரி போராட்டத்தில் ஈடுபட டாஸ்மாக் ஊழியர் சங்கம் முடிவு

அரசுத் துறை, அரசு சார்ந்த நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை, டாஸ்மாக் நிறுவனத்தில் உபரியாக உள்ள ஊழியர்களைக் கொண்டு நிரப்ப வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது என

அரசுத் துறை, அரசு சார்ந்த நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை, டாஸ்மாக் நிறுவனத்தில் உபரியாக உள்ள ஊழியர்களைக் கொண்டு நிரப்ப வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது என அனைத்துத் தொழிற்சங்க டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
 கோவை மண்டல அளவிலான டாஸ்மாக் அனைத்துத் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தொ.மு.ச. மாவட்டச் செயலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கோவை வடக்கு, கோவை தெற்கு, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தொ.மு.ச., சிஐடியூ, ஏஐடியூசி, பாமக, விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 சிஐடியூ டாஸ்மாக் தொழிற்சங்க மாநில பொதுச் செயலர் திருச்செல்வன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
 டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 14 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் சுமார் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்துக்குத் தேவைப்படும் ஊழியர்கள், உபரி ஊழியர்கள் எனத் தொழிலாளர்களை வகைப்படுத்தி, அவர்களின் கல்வித் தகுதி, பணிமூப்பு அடிப்படையில் பிற அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் மாற்றுப் பணி வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தி, ஜூலை 11-ஆம் தேதி கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மண்டலத் தலைமையகம் எதிரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது, இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 சிஐடியூ மாவட்டத் தலைவர் எஸ்.மூர்த்தி, பொதுச் செயலர் ஜான் அந்தோணிராஜ், ஏஐடியூசி கணேசன், எஸ்.சி., எஸ்.டி. சங்க நிர்வாகி மதியழகன், விடுதலை முன்னணியின் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com