ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வறண்ட நீரோடைகள்: குடிநீருக்காக அவதிப்படும் மலைவாழ் மக்கள்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் கிடைக்காமல் மலைவாழ் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வறண்ட நீரோடைகள்: குடிநீருக்காக அவதிப்படும் மலைவாழ் மக்கள்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் கிடைக்காமல் மலைவாழ் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, அமராவதி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை ஆகிய 6 வனச் சரகங்கள் உள்ளன. இந்த வனச் சரகங்களில் உள்ள செட்டில்மென்டுகளில் 6000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு வனப் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகள், நீரோடைகள், சிற்றோடைகள் போன்றவை முக்கிய நீராதாரங்களாக உள்ளன.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 674 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 272 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 602 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 360 மி.மீ. மழை  மட்டுமே பெய்துள்ளது.

போதிய மழை இல்லாததால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், செட்டில்மென்ட்டுகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் உள்ள ஓடைகள் வற்றிவிட்டதால், அவற்றின் அருகே ஊற்று தோண்டி அதில் கிடைக்கும் நீரை மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்நீர் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. சில செட்டில்மென்டுகளை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் நடந்து சென்று அணைகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகங்கள்:
இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம் கூறியதாவது:
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், குடிப்பதற்கு நீரின்றி மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி உள்ளிட்ட செட்டில்மென்ட் மக்களின் நிலை அறிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை வட்டாட்சியர் இதுவரை ஒருமுறை கூட இப்பகுதிகளுக்கு வந்தது இல்லை. மலைவாழ் மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு குடிநீர் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்கள் எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com