கிணற்றில் தவறி விழுந்த யானை: உயிருடன் மீட்க வனத் துறையினர் முயற்சி

பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை அடிவாரப் பகுதியில் உள்ள பாழுங்கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானையை மீட்கும் முயற்சியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை அடிவாரப் பகுதியில் உள்ள பாழுங்கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானையை மீட்கும் முயற்சியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அடிவாரத்தில் ரங்கநாதபுரம், திருமாலூர், ராயரூத்துபதி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. பாலமலை வனப் பகுதியில் இருந்து யானை, காட்டெருமை, மான்,காட்டுப் பன்றிகள் போன்ற வன விலங்குகள் இக்கிராமங்களுக்குள் அவ்வப்போது புகுந்து விடுகின்றன.
இந்நிலையில், ராயரூத்து கிராமத்துக்குள் 4 காட்டு யானைகள் திங்கள்கிழமை இரவு புகுந்தன. இது குறித்து முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், பெ.நா.பாளையம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக, வனவர் மாதையன், வனக் காப்பாளர் கண்ணன், வேட்டைத் தடுப்பு காவலர்கள் சேகர், பிரகாஷ் உள்பட வனத் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று பட்டாசுகளை வெடித்தும், தாரை,தப்பட்டைகளை அடித்தும் யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.
 வனப் பகுதிக்குள் விரட்டப்பட்ட  அந்த யானைகளில், 7 வயது மதிக்கத்தக்க ஆண் யானை தண்ணீரைத் தேடி திருமாலூரில் உள்ள செளந்தரராஜன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்துக்குள்  செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்தது. அப்போது, அங்குள்ள பாழுங்கிணற்றில் அந்த யானை தவறி விழுந்தது. யானையின் பிளிறல் சப்தம் கேட்டதும், கிராமவாசிகள் உடனடியாக வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு சென்ற பெ.நா.பாளையம் வனச் சரகர் பழனிராஜா தலைமையிலான வனத் துறையினர், யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்புப் பணி தாற்காலிகமாக நிறுத்தம்: மாவட்ட வன அலுவலர்  ராமசுப்பிரமணியம், கால்நடை மருத்துவர் அசோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். கோவை வடக்கு தீயணைப்பு துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 இந்நிலையில் மாலை நேரமானதும் வனப் பகுதிக்குள் இருந்து மற்ற யானைகள் கிணற்றுப் பகுதிக்கு வரத் தொடங்கின. இதையடுத்து, மீட்புப் பணிகள் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அனைத்துப் பணியாளர்களும் திரும்பிவிட்டனர்.
இதுகுறித்து ராமசுப்பிரமணியம் கூறுகையில், யானையை மீட்க முடியவில்லை. வியாழக்கிழமை காலை மீட்புப் பணிகள் தொடரும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com