போத்தனூர்-பொள்ளாச்சி இடையே ஏப்ரலில் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தகவல்

போத்தனூர் - பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஏப்ரலில் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு

போத்தனூர் - பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஏப்ரலில் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.சி.மனோகரன் தெரிவித்துள்ளார்.
 போத்தனூர் - பொள்ளாச்சி இடையே சுமார் 40 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் ரூ. 344 கோடி மதிப்பீட்டில் தற்போது நிறைவடைந்துள்னன.
 இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே டிராலி சோதனை ஓட்டம் வியாழக்கிழமையும், கிணத்துக்கடவு - போத்தனூர் இடையே டிராலி சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.
 இதையடுத்து, போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு டீசல் என்ஜின் மற்றும் மூன்று பெட்டிகளைக் கொண்ட பயணிகள் ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 இந்த ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தில் மாலை 4 மணி அளவில் புறப்பட்டு பொள்ளாச்சி ரயில் நிலையத்தை 4.45 மணி அளவில் சென்றடைந்தது.
 இதுகுறித்து, போத்தனூர், பொள்ளாச்சி ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.சி.மனோகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 போத்தனூர் - பொள்ளாச்சி வழித்தடத்தில் மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன.
 இதைத்தொடர்ந்து, ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவின்படி சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்கிச் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஒரு சில குறைபாடுகள் உள்ளன.
 இந்தக் குறைபாடுகளை ஒரு வாரத்துக்குள் நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் ரயில்வே அமைச்சகம் மற்றும் தென்னக ரயில்வேயின் உத்தரவின்படி வரும் ஏப்ரல் மாதத்தில் போத்தனூர் - பொள்ளாச்சி இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது என்றார்.
 இதனிடையே, பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, செட்டிபாளையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்தபோது கிணத்துக்கடவில் மட்டுமே ரயில் நின்று சென்றது. அதேபோல், தற்போதைய ரயிலும் அங்கு மட்டுமே நின்று செல்லும். எனவே, செட்டிபாளையத்தில் இந்த ரயில் நின்று செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றார்.
 இந்த ஆய்வின்போது, ரயில்வே பாதுகாப்பு இணை ஆணையர் ஸ்ரீனிவாஸ், தலைமை நிர்வாக அலுவலர் சுதாகர் ராவ், தலைமைப் பொறியாளர் பிரபுல்ல வர்மா, தலைமை சிக்னல் பொறியாளர் இளவரசன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர்  வர்மா, பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் நரேஷ் லால்வானி, போத்தனூர் கட்டுமானப் பிரிவு இணைத் தலைமைப் பொறியாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com