ஆழியாறு அணையில் தொடரும் மணல் கொள்ளை

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையில் கடந்த சில மாதங்களாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையில் கடந்த சில மாதங்களாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே பிஏபி திட்டத்தில் முக்கிய அணையாக ஆழியாறு அணை உள்ளது. இந்த அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டுப் பாசனத்தில் 6,400 ஏக்கருக்கும், புதிய ஆயக்கட்டுப் பாசனத்தில் 44 ஆயிரம் ஏக்கரும் பயனடைகின்றன. இதுதவிர, கேரளத்துக்கு ஆண்டுக்கு 7.25 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த அணை கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
மணல் கடத்தல்: கடந்த ஆண்டு மழைப்பொழிவு இல்லாததால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 78 அடியாக உள்ளது. ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் அறிவுத் திருக்கோயிலுக்கு எதிர்ப்புறமாக அணைக்குச் செல்ல வழி உள்ளது. இந்த வழியில் இரும்புக் கம்பியிலான தடுப்பை பொதுப் பணித் துறையினர் அமைத்துள்ளனர்.
இரவு நேரத்தில், இந்தத் தடுப்பை அகற்றிவிட்டு கார், சரக்கு, இருசக்கர வாகனங்கள் மூலம் அணைக்குள் சென்று அங்கிருந்து மூட்டைகள் மூலம் வால்பாறை சாலைக்கு மணல் கொண்டுவரப்படுகிறது.
பின்னர், அவை டிராக்டர்களுக்கு மாற்றப்பட்டு ஆழியாறு பகுதியில் மறைவாக உள்ள தனியார் இடத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இப்படி, கடந்த சில மாதங்களாக நாள்தோறும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3.30 மணிவரை ஆழியாறு அணையிலிருந்து பல யூனிட் மணல் கடத்தப்பட்டுள்ளது. இந்த மணல் யூனிட் ரூ. 6 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், மணல் கடத்திய சரக்கு வாகனத்தை பொதுமக்கள் புதன்கிழமை சிறைபிடித்து வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆழியாற்றைச் சேர்ந்த தங்கவேலின் மகன் குருசந்த் என்பவரிடம் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி வட்டாட்சியர் செல்வி கூறுகையில், "பொதுமக்கள் புகாரையடுத்து, ஆழியாறு அணைப் பகுதியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற சோதனையின்போது, மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் பிடிபட்டது. இதுதொடர்பாக குருசந்த் என்பவரிடம் நடத்திய விசாரணையில் வீடு கட்டும் பணிக்காக மணலைக் கடத்தியதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார்.
இதுகுறித்து ஆழியாறு அணையின் உதவி செயற்பொறியாளர் நரேந்திரன் கூறுகையில், ஆழியாறு அணைப் பகுதியில் மணல் கடத்தல் நடைபெற்றிருப்பது உண்மைதான் என்றார். மணல் கொள்ளை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்று அவரிடம் கேட்டதற்கு, இதுவரை புகார் ஏதும் தெரிவிக்கவில்லை. யானை தாக்கியதில்தான் அணைக்குச் செல்லும் தடுப்பு சேதமடைந்துள்ளது. தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
ஆழியாறு அணை அருகிலேயே காவல் நிலையம், வனத் துறை சோதனைச் சாவடி, பொதுப் பணித் துறை அலுவலகம் ஆகியவை இருந்தும் ஆழியாறு அணையில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com