மானாவாரி விவசாயத்துக்கான தேசிய சிறப்புத் திட்டம் தொடக்கம்

சூலூர் வேளாண்மைத் துறை மூலம் மானாவாரி விவசாயத்துக்கான தேசிய சிறப்புச் செயல் திட்டம் சூலூர் வட்டாரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

சூலூர் வேளாண்மைத் துறை மூலம் மானாவாரி விவசாயத்துக்கான தேசிய சிறப்புச் செயல் திட்டம் சூலூர் வட்டாரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  இத்திட்டம் தொடர்பாக மோப்பிரிபாளையம், சோளக்காட்டுப்பாளையம்  பகுதிகளில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. சூலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சபி அகமது தலைமை வகித்தார். விவசாயிகள், விவசாய அலுவலர்கள், விவசாயக் குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 இதில், வேளாண்மைப் பொறியாளர் தனலட்சுமி பேசுகையில், சூலூர் வட்டாரத்தில் 2,500 ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மானியமாக ஏக்கருக்கு ரூ.500 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். கோடை உழவு செய்வதற்கு முன் வயலின் புகைப்படம், உழவு செய்தபின் வயலின் புகைப்படம், நிலத்தின் சிட்டா, வங்கிக் கணக்கு புத்தக நகல்  ஆகியவற்றுடன் அந்தந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ, வட்டார  வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அணுகலாம் என்றார்.
 சூலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சபி அகமது பேசுகையில், மானாவாரி சோளம், பயிறு வகைகள் சாகுபடி செய்ய ஏதுவாக மேம்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து இலவசப் பயிற்சி அளிக்கப்படும். உயர் ரக சோளம் மற்றும் பயிறு வகை விதைகள், உயிரி உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படும்.
 மேலும், இத்திட்டத்தில் மழை நீரைச் சேமித்து சிறப்பாக பயன்படுத்தும் வகையில் தடுப்பணைப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டதின் மூலம் விதை உற்பத்தி செய்துதர விருப்பமுள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் விதை கொள்முதல் செய்து உற்பத்தி மானியமும் வழங்கப்படும். 50 சதவீதம் மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்படும். மேலும், இப்பகுதிகளில் வேளாண் கருவிகள் வாடகை மையம் ஏற்படுத்த, பவர் டில்லர், மினி டிரேக்டர் ஆகியவற்றை வாங்க விவசாயக் குழுக்களுக்கு, ரூ. 10 லட்சம் மதிப்புக்கு வாங்கும் கருவிகளுக்கு ரூ. 8 லட்சம் மானியம் வழங்கப்படும். இப்பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால்
விவசாயிகள், விரைவில் கோடை உழவுப் பணிகளை முடித்து மானாவாரி சாகுபடிக்குத் தயாராக வேண்டும்  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com