தண்ணீர் லாரி கவிழ்ந்து கல்லூரி மாணவர் சாவு; 5 பேர் காயம்

பெரியநாயக்கன்பாளையத்தையடுத்த பெட்டதாபுரத்தில் தண்ணீர் லாரி திங்கள்கிழமை கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

 பெரியநாயக்கன்பாளையத்தையடுத்த பெட்டதாபுரத்தில் தண்ணீர் லாரி திங்கள்கிழமை கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
கோவை மாவட்டம், மத்தம்பாளையம் அருகே உள்ள பெட்டதாபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரிக்குச் சொந்தமான லாரி பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தது. மத்தம்பாளையம், கோட்டைப் பிரிவு அருகே செல்லும்போது அங்கு பேருந்துக்காக காத்து நின்ற அதே கல்லூரியின் மாணவர்களும் அதில் ஏறிக் கொண்டனர்.
இரண்டு மாணவர்கள் ஓட்டுநர் கேபினிலும், நான்கு மாணவர்கள் லாரியின் இருபுறங்களிலும் நின்று கொண்டும் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
லாரி, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் லாரியில் நின்று கொண்டு பயணம் செய்த கட்டடவியல் துறை 3-ஆம் ஆண்டு மாணவர் அரியலூரைச் சேர்ந்த தன்ராஜ் (21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரண்டு மாணவர்களான முத்துராஜ், வீரபாண்டியன் ஆகியோர் கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிறுகாயங்களுடன் தப்பிய பெரியகுளத்தைச் சேர்ந்த ராஜா (20), சிவகங்கையைச் சேர்ந்த பிரபு (20), ஆனந்தகுமார் ஆகியோர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லாரி ஓட்டுநர் கிறிஸ்டோபர் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com