தென்மேற்குப் பருவ மழையை எதிர்நோக்கியுள்ள சிறுவாணி அணை

கோவை மக்களின் தாகத்தைத் தீர்க்க தென்மேற்குப் பருவமழையை சிறுவாணி அணை எதிர்நோக்கியுள்ளது.  

கோவை மக்களின் தாகத்தைத் தீர்க்க தென்மேற்குப் பருவமழையை சிறுவாணி அணை எதிர்நோக்கியுள்ளது.  
 கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதரமாக விளங்கும் சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம், வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
 இதில், சிறுவாணி அணையில் இருந்து மாநகராட்சியில் உள்ள 26 வார்டுகள் மற்றும் வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சிறுவாணி அணை, கடல் மட்டத்தில் இருந்து 863 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
 இந்த அணையில் 15 மீட்டர் அளவுக்குத் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இதன் மூலமாக நாள்தோறும் குடிநீர் விநியோகத்துக்காக 100 லட்சம் லிட்டருக்கும் அதிகமாகத் தண்ணீர் எடுக்கப்படும்.
 இந்நிலையில், கோடைக்கு முன்னரே சிறுவாணி அணையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து பூஜ்ஜியத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து கேரள அரசின் அனுமதியுடன் அணையின் மற்றொரு பகுதியில் இருந்து தற்போது 12 மோட்டார்கள் மூலமாகத் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
 இதன் மூலமாகத் தற்போது 80 லட்சம் லிட்டர் மட்டுமே தண்ணீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது கோடை மழை பெய்தாலும், சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் இருப்பில் உள்ள தண்ணீரையே விநியோகம் செய்து வருகின்றனர்.
 இதில், ஒரு சில மோட்டார் மட்டுமே இயங்குவதால் குறைந்த அளவிலேயே தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதுவும் ஓரிரு தினங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.  
 பொதுவாக தமிழகத்தில் பெய்யும் பருவமழையை விட கேரளத்தில் பெய்யும் பருவ மழையை நம்பியே சிறுவாணி அணை உள்ளது.
 இந்நிலையில், மே மாத இறுதியில் கேரளத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவ மழையே சிறுவாணி அணைக்கு நீர்வரத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 கைகொடுக்கும் பில்லூர்:   நீலகிரி மலைத் தொடரில் உருவாகும் பவானி ஆறு, கேரள மாநிலம், அட்டபாடி வழியாகப் பாய்ந்து, மீண்டும் தமிழகத்துக்குள் நுழைந்து பில்லூர் அணையை வந்தடைகிறது. இந்த அணையின் மொத்தக் கொள்ளளவு 100 அடிக்கு மேலாகும். ஆனால், தற்போது அணையின் நீர்மட்டம் 74 அடியாகவே உள்ளது.
 இந்த அணையின் நீரைக் கொண்டே கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் குடிநீர் வசதியைப் பெற்று வருகின்றனர். மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக மாநகராட்சியின் பெரும்பாலான வார்டுகளின் குடிநீர்த் தேவைக்காக பில்லூர் அணையில் இருந்து நாள்தோறும் ஒரு கோடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், பல்லடம், சூலூர் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் ஒரு கோடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
  கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழை பொய்த்தது. இதில், தென்மேற்குப் பருவகாலத்தில் 223 மி.மீ. மட்டுமே மழைப் பதிவாகி இருந்தது. இது சராசரி மழை அளவை விட 67.5 சதவீதம் குறைவாகும்.
 மேலும், வடகிழக்குப் பருவமழை காலத்தில் 109.1 மி.மீ. மழை மட்டுமே பதிவாகி இருந்தது. இது, சராசரி மழை அளவை விட 67.3 சதவீதம் குறைவாகும்.
 எனவே, இந்த ஆண்டு இரண்டு பருவமழையும் கைகொடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com