காருண்யா தொழில்நுட்ப நிறுவனத்தின் தொடர் அங்கீகாரம் ரத்து: பல்கலைக்கழக மானியக் குழு நடவடிக்கை

கோவையில் இயங்கும்  காருண்யா தொழில்நுட்பம், அறிவியல் நிறுவனத்தின் தொடர் அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) ரத்து

கோவையில் இயங்கும்  காருண்யா தொழில்நுட்பம், அறிவியல் நிறுவனத்தின் தொடர் அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) ரத்து செய்துள்ளது. எனினும், இது தொடர்பாக யு.ஜி.சி.க்கு விளக்கம் அனுப்பப்பட்டிருப்பதாக காருண்யா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதிகள், கல்வித் தரம் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட தாண்டன் குழுவின் பரிந்துரைப்படி, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மூடுவது, தொடர் அங்கீகாரத்தை ரத்து செய்வது, விளக்கம் கேட்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியக் குழு மேற்கொண்டு வருகிறது.
தாண்டன் குழுவினரின் பரிந்துரைகளின்படி, சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளைக் களையாத பி-பிரிவு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு, புதிய கல்வி மையங்கள் அமைக்கவும்,  விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதிலும் பி-பிரிவிலுள்ள 27 பல்கலைக்கழகங்களில் கடந்த ஆண்டு யு.ஜி.சி. குழுவினர் ஆய்வு நடத்தினர். இதையடுத்து யு.ஜி.சி. சார்புச் செயலர் குண்ட்லா மஹாஜன்  கோவை, காருண்யா தொழில்நுட்பம், அறிவியல் நிறுவனத்துக்கு கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், "காருண்யா பல்கலைக்கழகத்துக்கு 2004 ஜூன் 23 முதல் 2007 ஜூன் 22 வரை மட்டுமே நிகர்நிலை பல்கலைக்கழக நிலையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.  அதன் பிறகு அனுமதி அளிக்கப்படாத நிலையில், காருண்யாவின் கீழ் உள்ள தொழில்நுட்பம், அறிவியல் நிறுவனம், யு.ஜி.சி. அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதால் அதை உடனடியாக மூட வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வழங்கப்படும் சான்றிதழ்கள் செல்லாது எனவும், குண்ட்லா அதில்  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு மாதத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
துணைவேந்தர் விளக்கம்:
இந்நிலையில், தொடர் அங்கீகாரம் தொடர்பாக யு.ஜி.சி.க்கு விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
காருண்யா பல்கலைக்கழகத்துக்கு கடந்த 2009,  2016-ஆம் ஆண்டுகளில் யு.ஜி.சி. குழுவினர் வருகை புரிந்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியான தேசிய அளவிலான தர வரிசைப் பட்டியலில் 48-ஆவது இடத்தை காருண்யா பிடித்திருந்தது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் என்று யு.ஜி.சி. தெரிவித்த அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டுவிட்டது. இது தொடர்பான விளக்கமும் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து யு.ஜி.சி. குழுவினர் ஓரிரு நாள்களில் பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வர உள்ளனர். எனவே, தற்போதைய அறிவிப்பைக் கண்டு மாணவ, மாணவிகள் அஞ்சத் தேவையில்லை. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்கள், ஆய்வகங்கள், நூலகம், வகுப்பறை போன்றவற்றை காருண்யா கொண்டிருக்கிறது. தற்போதைய பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com