"நிமோனியா பாதிப்பால் குழந்தைகள் இறப்பதைத் தடுக்க அரசு சார்பில் இலவச தடுப்பூசி போட வேண்டும்'

நிமோனியா பாதிப்பால் ஏற்படும் குழந்தைகள் இறப்பைத் தடுக்க அரசு சார்பில் இலவச தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் அகாதெமி வலியுறுத்தியுள்ளது.

நிமோனியா பாதிப்பால் ஏற்படும் குழந்தைகள் இறப்பைத் தடுக்க அரசு சார்பில் இலவச தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் அகாதெமி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் அகாதெமியின் கோவை பிரிவுத் தலைவர் டாக்டர் இஸ்மாயில், பொருளாளர் ஜெயஸ்ரீ,  செயலாளர் கார்த்திக் அண்ணாமலை ஆகியோர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் 2 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை நிமோனியாவால் பாதிக்கப்படுகிறது.  நிமோனியா என்பது நுரையீரலில் நீர் சேர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல்நலன் பாதிக்கப்படும். இதற்கு உரிய காலத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் நிமோனியா பாதிப்பில் இருந்து குணமடைய முடியும்.
வைரஸ்,  பாக்டீரியா,  பூஞ்சை போன்ற பல்வேறு காரணங்களால் நிமோனியா பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக 5 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்படும்போது சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட நிகழ்கின்றன.
 இதில் தாய்ப்பால் முறையாக கிடைக்காதது,  உடலில் நோய் எதிர்ப்பு குறைந்து இருப்பது,  ஊட்டச் சத்து குறைவு போன்ற காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்படும்.  
தமிழகத்தில் 5 வயதுக்கு குறைவாக உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 16 சதவீதம் குழந்தைகள் நிமோனியாவில் இறக்கின்றனர்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு காற்றின் மூலம் கூட பிறரிடம் இருந்து தொற்றுக் கொள்ளும். எனவே நிமோனியா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள குழந்தை பிறந்து 6 முதல் 14 வாரங்கள் வரையில் மூன்று தவணையாகவும்,  ஆண்டுக்கு ஒரு முறை 4 தவணைகளாகவும் தடுப்பூசி அளிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
 இதனை ஏற்று பிகார்,  ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் அரசு சார்பில் நிமோனியா தடுப்பூசி அளிக்கப்படுகிறது.  தற்போது தனியார் மருத்துவமனையில் அளிக்கப்படும் தடுப்பூசிக்கு ரூ.3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, அரசு சார்பில் இலவச தடுப்பூசி வழங்குவதன் மூலம் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இறப்பை குறைக்க முடியும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com