விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்தனர்.

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்தனர்.
 கோவை,  கவுண்டர் மில் அருகேயுள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (60). இவர் காவல் துறையில் நிர்வாக அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி கலாமணி,  மகன் பாஸ்கர், மகள் விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர். இவர் கணபதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது,  அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தார். இச்சம்பவம் 2008-ஆம் ஆண்டு நடைபெற்றது.
இதையடுத்து விபத்து இழப்பீடு வழங்கக் கோரி விவேகானந்தனின் மனைவி கலாமணி,  கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
 இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  உயிரிழந்த விவேகானந்தன் குடும்பத்தினருக்கு ரூ. 2.30 லட்சம் இழப்பீடு வழங்க 2011-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.  ஆனால்,  இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் அரசுப் போக்குவரத்துக் கழகம் காலம் தாழ்த்தி வந்துள்ளது.
 இதையடுத்து இழப்பீடுத் தொகையை விரைவில் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் 7.5 சதவீதம் வட்டியுடன் சேர்த்து ரூ. 3.87 லட்சம் வழங்கும்படி மீண்டும் உத்தரவிட்டது.  அதன் பிறகும் இழப்பீட்டுத் தொகை வழங்காததால்,  கோவை போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி கார்த்திகேயன் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
 இதையடுத்து,  கோவை,  காந்திபார்க் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த  7-ஆம் எண் நகரப் பேருந்தை  நீதிமன்ற ஊழியர்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்து, கோவை நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டுச் சென்றனர்.
இதேபோல்  அரசுப் பேருந்து மோதி  காயமடைந்த கேரள இளைஞருக்கு ரூ. 11.92 லட்சம்  விபத்து இழப்பீடு வழங்க கோவை மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு நீதிமன்றம்  புதன்கிழமை  உத்தரவிட்டது. இதனடிப்படையில் சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com