கருணைக் கொலை செய்யக் கோரி கை, கால்கள் செயலிழந்த தொழிலாளி மனு

விபத்தில் கை, கால் செயலிழந்து வேலைக்கு செல்ல முடியாத தொழிலாளி தன்னை கருணைக் கொலை செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தார்.

விபத்தில் கை, கால் செயலிழந்து வேலைக்கு செல்ல முடியாத தொழிலாளி தன்னை கருணைக் கொலை செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம்,  கோவை மாவட்டம், சோமனூர் உடையார் தெருவைச் சேர்ந்தவர் வர்க்கீஸ் என்பவர் அளித்த மனு விவரம்:
 கூலித் தொழிலாளியான எனக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்தன.  இதையடுத்து, சமூக நலத் துறை மூலம் உதவித் தொகை கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பித்தேன். ஆனால்,  எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்,  மிகுந்த சிரமத்தில் உள்ளேன். எனக்கு 18 வயதில் கல்லூரிக்கு செல்லும் மகள் உள்ளார். இந்நிலையில்,  எனது மனைவியும் 4 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிந்து படுக்கையில் இருந்து வருகிறார்.
  எங்கள் இருவருக்கும் மருத்துவ உதவி செய்ய யாரும் இல்லை. மேலும் எனது மகள் கல்லூரிக்கு சென்று படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளார்.  மருத்துவத்துக்கு மாதம் ரூ. 8 ஆயிரம் வரையில்  செலவிட வேண்டியுள்ளது.
 எனவே, மன ரீதியாகவும்,  பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள எனக்கு உதவி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் என்னை கருணைக் கொலை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்: கோவை மாவட்டம்,  தடாகம் பகுதியில் உள்ள தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம்,  எட்டிமடை,  மதுக்கரை,  மாவுத்தம்பதி ஆகிய இடங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளை பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
 இந்த நிலையில் யானைகள் ஊருக்குள் நுழைந்த தகவல் குறித்து வனத் துறை அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் புகார் அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. எனவே,  யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு
வழங்க வேண்டும் என கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.கந்தசாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்க வலியுறுத்தி மனு: இதுகுறித்து கோவை, வெரைட்டிஹால்,  மட்டச்சாலை பகுதி பொதுமக்கள் அளித்த மனு:
எங்கள் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.  இங்கு வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட குடியிருப்புகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.  இதன்படி தற்போது குடியிருப்புகள் அகற்றப்பட்டுவிட்டன. ஆனால் 200-க்கும்மேற்பட்ட குடும்பங்களுக்கு தற்போது
வரை குடிசைமாற்று வாரியத்தின் குடியிருப்புகளில் இடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம்.
 எனவே,  இப்பகுதியில் வசித்தவர்களின் உரிய ஆவணங்களை சரிபார்த்து உடனடியாக அவர்களுக்கு வீடு ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
கூட்டுறவுச் சங்க நிர்வாகக் குழுவை கலைக்க வேண்டும்:  கோவை மாவட்டம்,  வாகராயம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வேளாண்மை சங்கத் தலைவராக சி.மணி மற்றும் நிர்வாகக் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். கூட்டுறவு சங்க விதிகளுக்கு  எதிராக சங்க உறுப்பினர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு கடன் வழங்கி உள்ளனர். இதனால் கூட்டுறவு சங்கத்துக்கு பெரும் இழப்பு ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். எனவே சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழுவை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கருமத்தம்பட்டி பேரூராட்சி நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் விற்பனையை தடுக்க வேண்டும்: இதுகுறித்து மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் வே.ஈஸ்வரன் அளித்த மனு:
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப் பொருள்களின் விற்பனை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இது தொடர்பாக பல செய்திகள் வந்தும் போதைப் பொருள்கள் விற்பனை குறையவில்லை. எனவே,  போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com