மாணவர்கள் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்: உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு

தமிழக மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தவேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

தமிழக மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தவேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 34-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. விழாவுக்கு தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்தார்.
உயர்கல்வித் துறை அமைச்சரும், இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் முன்னிலை வகித்துப் பேசினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றினார். முன்னதாக துணை வேந்தர் ஆ.கணபதி வாழ்த்திப் பேசினார்.
விழாவில், தங்கப் பதக்கம் வென்ற 126 மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 582 ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பட்டம் வழங்கினார்.
 இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:
உயர்கல்வித் துறையில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தப் பெருமைக்கு தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. கலை, அறிவியல் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் பாரதியார் பல்கலைக்கழகம்  28-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
 பாரதியார் பல்கலைக்கழகம் 4 மாவட்டங்களில் 120 கல்லூரிகள், 5 உறுப்புக் கல்லூரிகள், ஒரு விமானப் படை நிர்வாகவியல் கல்லூரியைக் கொண்டிருக்கிறது. இவற்றில் 3.15 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
 தரமான உயர் கல்வியை வழங்குவதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. நாட்டில் 799 பல்கலைக்கழகங்கள், 39 ஆயிரம் கல்லூரிகள் உள்ள நிலையில், தமிழகத்தில் 58 பல்கலைக்கழகங்களும், 2,368 கல்லூரிகளும் உள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 65 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 8 கலை, அறிவியல் கல்லூரிகள், 3 உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த 3 கல்லூரிகளும் கோவையில் தொடங்கப்பட்டன.
 தேசிய அளவில் 18 முதல் 23 வயது வரையிலான 1 லட்சம் மாணவர்களுக்கு சராசரியாக 28 கல்லூரிகள் இருக்கும் நிலையில், தமிழகத்தில் 32 கல்லூரிகள் உள்ளன. அதேபோல, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 24.5 சதவீதமாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் 44.3 சதவீதமாக உள்ளது.
உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 23.5 சதவீதமாகவும், தமிழகத்தில் 42.4 சதவீதமாகவும் உள்ளது. உயர்கல்வி பெறும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் விகிதம் தேசிய அளவில் 14.2 சதவீதமாகவும், தமிழகத்தில் 31.8 சதவீதமாகவும் உள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 37 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன. கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள் அளவில் பாரதியார் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 28-ஆவது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. இங்கு பட்டம் பெற்றுள்ள மாணவர்களும், பட்டம் பெற உள்ளவர்களும் புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:
மனிதர்களுக்கு அன்பு செலுத்த ஒருவரும், முனைந்து செயல்பட ஒரு தொழிலும், என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதற்கு ஒரு கனவும் தேவை. இந்த மூன்றும் இருந்தால் ஒருவர் ஏற்றம் அடைய முடியும். தோல்விகள் எப்போதும் தவறில்லை. தோல்வியை எப்படி எடுத்துச் செல்கிறோம் என்பதில்தான் அதற்கான பதில் உள்ளது. அனுபவங்கள் மாணவர்கள் முன்னேறுவதற்கு உதவும். கல்விதான் ஒருவரது அறியாமை எவ்வளவு என்பதை உணர்த்தும். எனவே, மாணவர்கள் தங்களது வாழ்க்கைப் பயணத்தில் கல்வியைத் துணையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கல்வி தங்களுக்கும், குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றார்.
விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 550 மாணவ, மாணவிகளுக்கு முனைவர் பட்டங்கள், தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வனிதா, ஆட்சிக் குழு, ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com