சூலூர் அருகே அரசுப் பள்ளியின் மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்தது

கோவை மாவட்டம்,  நீலாம்பூர் அரசுப் பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை காரை  செவ்வாய்க்கிழமை பெயர்ந்து விழுந்தது.

கோவை மாவட்டம்,  நீலாம்பூர் அரசுப் பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை காரை  செவ்வாய்க்கிழமை பெயர்ந்து விழுந்தது.
நீலம்பூரில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.  அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் இப்பள்ளிக்கு 2009-இல் 6 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இந்த வகுப்பறைகளின் மாடியில் சுருக்கி எனும் தளம் அமைக்கப்படவில்லை என்றும்,  கம்பிகள் மாடியில் முறையாக அகற்றப்பட்டாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் இப்பகுதியில் பெய்த தொடர் மழையால் 6-ஆம் வகுப்பறையின் மாடியில் தண்ணீர் தேங்கி, அது வகுப்பறைக்குள் கசிந்துள்ளது.
இதுகுறித்து சூலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் அப்பள்ளித் தலைமை ஆசிரியர் ரீட்டா செப்டம்பர் 12- ஆம் தேதி  புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த வகுப்பறையின் மேற்கூரையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை காரை பெயர்ந்து விழுந்தது. மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக இவ்விபத்து நிகழ்ந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து,  மாணவர்கள் அனைவரும் மரத்தடியில் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது.
அதிகாரிகளின் மெத்தனம்: இவ்விபத்து குறித்து அறிந்த பெற்றோர், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பெற்றோர் கூறுகையில்,  வகுப்பறையின் நிலை குறித்து அதிகாரிகளிடம் பள்ளித் தலைமை ஆசிரியர் ஏற்கெனவே தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் மெத்தனமாக இருந்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  உடனடியாக இப்பள்ளி கட்டடங்களைச் சீரமைக்க வேண்டும் என்றனர்.
இதைத் தொடர்ந்து,  சூலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்  நாகராஜன்,  சூலூர் காவல் துறையினர் விபத்து நிகழ்ந்த வகுப்பறையைப் பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com