போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தினால் கோவையின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்: அமெரிக்க துணைத் தூதருடனான கலந்துரையாடலில் தகவல்

கோவையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தினால் தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க துணைத் தூதருடனான

கோவையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தினால் தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க துணைத் தூதருடனான கலந்துரையாடலில், இளம் தொழில் முனைவோர் தெரிவித்தனர்.
 தெலங்கானா மாநிலம்,  ஹைதராபாத்தில் வரும் நவம்பர் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலும் சர்வதேச தொழில் முனைவோர் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்த உள்ள இந்த மாநாட்டில் சுமார் 160 நாடுகளில் இருந்து 1,600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
 இந்தியா சார்பில் பிரதமர் மோடியும்,  அமெரிக்கா சார்பில் அதிபரின் ஆலோசகரும் அவரது மகளுமான இவான்கா டிரம்ப் உள்ளிட்டோரும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டையொட்டி,  கோவையில் புதிய தொழில் முனைவோருக்கு உள்ள வாய்ப்புகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில், பி.எஸ்.ஜி. மேலாண்மைக் கல்லூரியில் புதன்கிழமை கலந்துரையாடல் நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் உதவித் தூதர் (பொது விவகாரங்கள்) லாரன் லவ்லேஸ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஆர்.நந்தகோபால் முன்னிலை வகித்தார். இதில், பெண் தொழில் முனைவோர், மாணவர்கள், இளம் தொழில் முனைவோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் லாரன் லவ்லேஸ் பேசும்போது, சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டுக்கு முன்னதாக தொழில் நகரமான கோவையைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோரை சந்தித்து கருத்துகளைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன். கோவையில் புதிய தொழில் முனைவோர் உருவாவது மற்ற நகரங்களைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. அதற்கு இங்குள்ள சூழல்களுடன் மக்களும் காரணமாக இருக்கின்றனர்.
 இந்த ஆண்டு தொழில் முனைவோர் மாநாடு, தொழில் தொடங்குவதில் மகளிருக்கு முன்னுரிமை அளிப்பதைக் குறித்து பேச உள்ளது. தொழில் துறையில் ஏற்கெனவே உள்ளவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் மாநாட்டில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
 இதைத் தொடர்ந்து இளம் தொழில் முனைவோர் பேசும்போது,  கோவையில் சர்வதேச விமான நிலையம் இருந்தாலும் இங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடியாக விமான சேவை இல்லை. பெரிய அளவிலான விமானங்கள் வந்து செல்ல ஏதுவாக ஓடுபாதை, விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படாதது ஒரு காரணம்.
  இதனால் பெரிய சரக்கு விமானங்கள் வர முடிவதில்லை. இதனால் ஏற்றுமதியாளர்கள் கொச்சி, தூத்துக்குடி துறைமுகங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே, கோவையில் விமானம் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றனர்.
 பெண் தொழில் முனைவோர் பேசும்போது, தமிழகத்தில் பெண்கள் என்றாலே அவர்கள் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு கொண்டவர்கள் என்ற பார்வை இருப்பதும், பெண்கள் தொழில் தொடங்கினால் அவர்களுக்கு குடும்பத்திலேயே போதுமான ஆதரவு கிடைக்காததும் பல பெண்களால் பெரிய அளவில் வளர முடியாமல் போனதற்கு காரணம் என்றனர் அவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com