தீபாவளி: கோவை ஒப்பணக்கார வீதியில் இன்றுமுதல் போக்குவரத்தில் மாற்றம்

தீபாவளியையொட்டி ஆடைகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க கோவை ஒப்பணக்கார வீதியில் மக்கள் குவிந்து வருவதால்

தீபாவளியையொட்டி ஆடைகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்க கோவை ஒப்பணக்கார வீதியில் மக்கள் குவிந்து வருவதால் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) முதல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி, பாலக்காடு சாலையில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் உக்கடத்தில் இருந்து வாலாங்குளம் புறவழிச் சாலை வழியாக கிளாசிக் டவர் சென்று ரயில் நிலையம் வழியாகச் செல்லலாம்.
பாலக்காடு சாலையில் இருந்து பூ மார்க்கெட்,  மேட்டுப்பாளையம் சாலை செல்லும் பேருந்துகள் உக்கடத்தில் இருந்து பேரூர் புறவழிச் சாலை வழியாக செட்டி வீதி,  சலீவன் வீதி, காந்தி பார்க், டி.பி. சாலை வழியாகச் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம்.
அவிநாசி சாலை,  திருச்சி சாலை,  ரயில் நிலையத்தில் இருந்து பேரூர்,  ஈஷா யோக மையம், காருண்யா செல்லும் பேருந்துகள் டவுன்ஹால்,  உக்கடம் காவல் நிலையம் எதிர்புறம் திரும்பி பேரூர் புறவழிச் சாலை வழியாகச் சென்று சிவாலயா சந்திப்பில் செல்வபுரத்தை அடைந்து செல்லலாம்.
ரயில் நிலையத்தில் இருந்து டவுன்ஹால் வழியாக காந்தி பார்க், மேட்டுப்பாளையம் சாலை செல்லக் கூடிய பேருந்துகள் டவுன்ஹால்,  உக்கடம்,  பேரூர் புறவழிச் சாலை வழியாக செட்டி வீதி, சலீவன் வீதி, காந்தி பார்க், டி.பி. சாலை வழியாகச் சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்லலாம்.
இருசக்கர வாகனங்கள்: ஒப்பணக்கார வீதி,  ராஜ வீதிகளில் உள்ள வணிக வளாகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் வாகனங்களை எக்காரணத்தைக் கொண்டும் பொதுமக்கள் வாகனம் நிறுத்தும் இடங்களில் நிறுத்தக் கூடாது.
பொதுமக்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை ராஜ வீதி,  வைசியாள் வீதியில் ஒரு புறமும்,  சோளக் கடை முனையில் உள்ள மாநகராட்சி பார்க்கிங்,  மணிக்கூண்டு அருகில் உள்ள மாநகராட்சி பார்க்கிங்கில் நிறுத்திக் கொள்ளவேண்டும். ஒப்பணக்கார வீதியில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தக் கூடாது.  காந்திபுரம், கிராஸ்கட் சாலைக்கு வரும் வாகனங்கள் எண் 8 மாநகராட்சி பார்க்கிங்,  மத்திய சிறை மைதானத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை வரும் 17-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். எனவே, பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com