தொழிலாளி கொலை: 4 பேர் கைது

கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்கு உள்பட்ட  பகுதியில் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நான்கு பேரை

கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்கு உள்பட்ட  பகுதியில் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நான்கு பேரை சிங்காநல்லூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
 கோவை ஒண்டிப்புதூர், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (28). ராமச்சந்திரா நாயுடு லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இருவரும் கோவையில் உள்ள லேத் பட்டறையில் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.
இருவரும் மது அருந்திவிட்டு எஸ்.எம்.எஸ். லே-அவுட் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு சிலர் வெடித்த பட்டாசு சிதறி இருவர் மீதும் விழுந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து இருவரும் பட்டாசு வெடித்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், பட்டாசு வெடித்தவர்கள் சுரேஷ்குமாரைக் கத்தியால் குத்தியுள்ளனர். தடுக்க வந்த கார்த்திக்குக்கும் கத்திக் குத்தி விழுந்துள்ளது.
இதில், சம்பவ இடத்திலேயே சுரேஷ்குமார் உயிரிழந்தார். காயமடைந்த கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து, கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு (25), கோகுல்நாதன் (24), அனீஷ்குமார்(21), ரவி (23) ஆகியோருக்கும், கொலை செய்யப்பட்ட சுரேஷ்குமாருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததும், அதன் காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து,  சந்துரு, கோகுல்நாதன், அனீஷ்குமார், ரவி ஆகியோரை சிங்காநல்லூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தொழிலாளி எரித்துக் கொலை: கோவையை அடுத்த ஆலாந்துறை காவல் எல்லைக்கு உள்பட்ட நரசீபுரம் வனப் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில்,  அங்கு சென்ற ஆலாந்துறை போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். சடலமாக மீட்கப்பட்டவர் நரசீபுரத்தைச் சேர்ந்த சுந்தரசாமியின் மகன் கூலித் தொழிலாளியான சின்னதுரை (38) என்பது தெரியவந்தது.
மேலும், கொலை செய்யப்பட்ட சின்னதுரைக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் புதன்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த விரோதம் காரணமாக சின்னதுரை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com