சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்து: ககன்தீப் சிங் பேடி நேரில் விசாரணை

கோவை மாவட்டத்தில் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் உயிரிழந்தவிவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என விசாரணை அதிகாரி ககன்தீப் சிங் பேடி

கோவை மாவட்டத்தில் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் உயிரிழந்தவிவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என விசாரணை அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே, சோமனூரில் செப்டம்பர் 7-ஆம் தேதி பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் பலத்த காயமடைந்தனர். பேருந்து நிலையம்கட்டுவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், விபத்து தொடர்பாக தமிழக அரசு நியமித்த ஒரு நபர் விசாரணைக்குழு சம்பவ இடத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியது. சோமனூர் பேருந்து நிலையத்தில் தமிழக வேளாண்மைஉற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி விசாரணை நடத்தினார். விபத்து குறித்து பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து நேரடியாகவும்,மனுவாகவும் புகார்களைப் பெற்றார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தொழில்நுட்ப நிபுணர் குழுவைக் கொண்டு விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கட்டடத்தின் தரம், மண்ணின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பேருந்துநிலையம் தொடர்பான விவரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். இந்த விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் விரைவில் சமர்பிக்கப்படும். அதில் விபத்துக்கான காரணம்,இதுபோன்ற விபத்துகளைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகள் இடம்பெறும். தவறு செய்தவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com