தலைக்கவசம் அணியாமல் வந்ததாகக் கூறி ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம்

கோவை ஆலாந்துறை அருகே தலைக்கவசம் அணியாமல் வந்ததாகக்கூறி ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை ஆலாந்துறை அருகே தலைக்கவசம் அணியாமல் வந்ததாகக்கூறி ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை, ஆலாந்துறையைச் சேர்ந்தவர் கருணாகரன் (40). இவர், செப்டம்பர் 13-ஆம் தேதி காருண்யா நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டிச் சென்றுள்ளார். அங்கு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில், கருணாகரனின் ஆட்டோவை நிறுத்தி ஆவணங்களைச் சோதித்துள்ளனர். அப்போது, போலீஸாருக்கும், கருணாகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதைத்தொடர்ந்து, தலைக்கவசம் அணியாமல் வந்ததாக கருணாகரனுக்கு உதவி ஆய்வாளர் சங்கரநாராயணன் ரூ. 100 அபராதம் விதித்துள்ளார்.
இதுகுறித்து, காருண்யா நகர் காவல் உதவி ஆய்வாளர் சங்கரநாராயணன் கூறுகையில், வாகனச் சோதனையின்போது அந்த வழியாக சரக்கு ஆட்டோவில் வந்த கருணாகரன் சீருடையில் இல்லை. அதுகுறித்து கேட்டபோது காவல் நிலையத்துக்கு குடிநீர் கேன் விநியோகம் செய்துவிட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்தப் பதட்டத்தில் கருணாகரனுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸில் தலைக்கவசம் அணியாததால் அபராதம் என தவறுதலாக வழக்குப் பதிவு செய்துவிட்டேன்.
அதேவேளையில், அவருக்கு வழங்கப்பட்ட உடனடி அபராத ரசீதில் சீருடை இல்லை என்பதைத் தெளிவாக எழுதியுள்ளேன். சம்பந்தப்பட்ட நபரும் ரூ. 100 அபராதம் செலுத்தி ரசீது பெற்றுச் சென்றுள்ளார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடமும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com