உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மூலமாக தாயிடம் கல்லீரல் தானமாக பெற்று 11 வயது சிறுமிக்குப் பொருத்தம்

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலலாக தாயிடம் இருந்து கல்லீரல் தானமாக பெற்று 11 வயது சிறுமிக்குப் பொருத்தப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலலாக தாயிடம் இருந்து கல்லீரல் தானமாக பெற்று 11 வயது சிறுமிக்குப் பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் சுவாமிநாதன், டாக்டர் ஜோசப் ஜான், ஜீரண மண்டல சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தைச் சேர்ந்த தொழிலாளி தம்பதியின் 11 வயது மகள் இலக்கியா பித்த நீர்க் குழாய் சிதைவால் (வேனீஷ் பைல் டக்ட் சிண்ட்ரோம்) பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிறுமிக்கு அவரது 6 வயது முதலே கல்லீரலில் சுருக்கம் ஏற்படத் தொடங்கியது. இந்த அரிய வகை கல்லீரல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து கண்டறிய முடியாது.
இதனால் சிறுமி இயல்பான வாழ்க்கை வாழ முடியாமல் வாந்தி, உதிரப் போக்கு, தோல் அரிப்பு, உடல் வளர்ச்சி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் சிரமப்பட்டு வந்தார்.
இதையடுத்து, மருந்துகள் மூலமாக 3 முதல் 4 ஆண்டுகள் வரை சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, கல்லீரல் முற்றிலும் செயலிழந்ததால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலமாகவே சிறுமியின் உயிரைக் காக்க முடியும் என பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தாயின் ரத்த வகையும், சிறுமியின் ரத்த வகையும் ஒரே பிரிவாக இருந்ததால் தாயிடம் இருந்து கல்லீரலை தானமாகப் பெற்று உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக சிறுமிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.
பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு தாயின் இடது பக்க கல்லீரலில் இருந்து 220 கிராம் கல்லீரல் (50 சதவீதம்) வெட்டி எடுக்கப்பட்டு சிறுமிக்குப் பொருத்தப்பட்டது. இதில், தாயிடம் மீதமுள்ள 50 சதவீத கல்லீரலும், குழந்தைக்குப் பொருத்தப்பட்டுள்ள கல்லீரலும் 12 வாரத்தில் முழுமையான வளர்ச்சியடைந்துவிடும்.
தற்போது தாயும், சிறுமியும் முற்றிலும் குணமடைந்து வருகின்றனர். பொதுவாக உயிரோடு உள்ள நபரிடம் இருந்து கல்லீரலை தானமாக பெறமுடியும். குறிப்பாக குழந்தைப் பருவத்தில் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்போது கல்லீரலை தானமாகப் பெற்று முற்றிலும் குணப்படுத்த முடியும். தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com