சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்குகருப்புக் கொடி காட்ட முயன்ற திமுகவினர் கைது

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் அவதூறாகப் பேசியதாகக் கூறி கருப்புக் கொடி காட்ட முயன்ற திமுகவினர் 30 பேரை போலீஸார் சனிக்கிழமை

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் அவதூறாகப் பேசியதாகக் கூறி கருப்புக் கொடி காட்ட முயன்ற திமுகவினர் 30 பேரை போலீஸார் சனிக்கிழமை கைதுசெய்தனர்.
கடந்த 2 நாள்களுக்கு முன்னர் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பத்திரிக்கையாளர்களுக்கு சென்னையில் பேட்டியளித்தார். அப்போது, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை பொள்ளாச்சி ஜெயராமன் அவதூறாகப் பேசியதாகக் கூறி பொள்ளாச்சியில் திமுகவினர் அவருக்கு சனிக்கிழமை கருப்புக் கொடி காட்ட முயன்றனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற இருந்த நோயாளிகள் நலச்சங்கக் கூட்டம் மற்றும் புதிய கட்டட அடிக்கல் நாட்டுவிழாவுக்கு திப்பம்பட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து சின்னாம்பாளையம் வழியாக சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வருவதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, சின்னாம்பாளையம் பகுதியில் சனிக்கிழமை காலை 10.30-க்கு கருப்புக் கொடியுடன் திரண்ட திமுகவினர் பொள்ளாச்சி ஜெயராமனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சாலை மறியலிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரச் செயலாளர் தென்றல் செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் மருதவேல், இளைஞரணி நிர்வாகி நவநீதகிருஷ்ணன் உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த பொள்ளாச்சி வி.ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரை அவமரியாதையாகப் பேசியதற்காக நான் கருத்து தெரிவித்திருந்தேன். அதற்கு அவர், பொள்ளாச்சி ஜெயராமன் கருத்துக்கு பதில் தெரிவித்தால் தரம் தாழ்ந்துவிடும் என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். பல முறை சட்டப் பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் எனது கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். மு.க.ஸ்டாலின் கேள்விக்கு நான் பதில் தந்துள்ளேன். அப்போதெல்லாம் அவரது தரம் தாழ்ந்துபோகவில்லையா.
தற்போது ஸ்டாலின் முதல்வர் கனவில் அதிகம் மிதந்து வருவதால் அவருடைய பேச்சுகள் அப்படியுள்ளன. எனக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற திமுகவினர் அனைவரும் எனக்காக தேர்தல் நேரத்தில் பணியாற்றியவர்கள் தான். நான் தேர்தலில் போட்டியிடும் போதெல்லாம் எனக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியுள்ளனர். மீண்டும் நான் தேர்தலை சந்திக்கும்போதும் எனக்காக அவர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள். எனவே, இன்று கருப்புக் கொடி காட்டிய பொள்ளாச்சி திமுகவினர் மீது எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com