வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க சிஐடியூ வலியுறுத்தல்

இந்த ஆண்டு வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யூ. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யூ. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட பொது ஒப்பந்தம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சங்கத்தின் முதல் மாநாடு காட்டூரில் உள்ள சிஐடியூ பஞ்சாலைத் தொழிலாளர் சங்க கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு நிர்வாகி க.நாகராஜ் தலைமை வகித்தார். மாநாட்டைத்  துவக்கி வைத்து சிஐடியூ மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன் உரையாற்றினார். முன்னதாக,  கோவையில் உள்ள இந்தி பேசும் தொழிலாளர்கள்,  புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்நிலை, நிறுவனங்களின் சுரண்டல்,  ஊதிய ஏமாற்றம் குறித்த அறிக்கையை சங்க நிர்வாகி எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்வைத்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
பிழைப்புக்காக இடம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு வசதியாக அவரவர் தாய்மொழியில் கல்வி பயில பள்ளி வசதியை ஏற்படுத்த வேண்டும்.  ஒரே அளவு உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களிடையே உள்ள ஊதிய வேறுபாட்டை அகற்றி அனைவருக்கும் சமமான ஊதியத்தை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கப்பட வேண்டும்.  அனைத்து துறைகளிலும் உள்ள ஒப்பந்த முறை,  தாற்காலிக, தினக் கூலி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். இந்தி பேசும் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை, எரிவாயு உருளை ஆகிய வசதிகளை செய்து தரப்பட வேண்டும்.
 வடமாநிலத் தொழிலாளர்களின் மீது பொய் வழக்குப் போட்டு அலைக்கழிப்பை செய்யும் காவல் துறையின் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
மேலும்,  வடமாநில பண்டிகை காலங்களில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com