விளைநிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள்: ஈரோட்டில் மே 6-இல் எதிர்ப்பு மாநாடு: விவசாயிகள் அறிவிப்பு

விவசாயப் பகுதிகளில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஈரோட்டில்  வரும் மே 6ஆம் தேதி மாநாடு நடைபெற்ற இருப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

விவசாயப் பகுதிகளில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஈரோட்டில்  வரும் மே 6ஆம் தேதி மாநாடு நடைபெற்ற இருப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 30- க்கும் அதிகமான உயர்மின் அழுத்த மின்தடங்களை அமைக்க மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன்,  தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் ஆகியவை முடிவு செய்துள்ளன. அதன்படி, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள புகலூரில் மின் பகிர்மான மையம் அமைக்கப்படுகிறது. இந்த மின் பகிர்மான மையத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுடன் இணைக்கும் வகையில் சுமார் 30-க்கும் அதிகமான வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன.
புகலூரில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் பகுதி வரையும், புகலூரில் இருந்து திருவலம் வரையும், புகலூரில் இருந்து மைவாடி வரையும், புகலூரில் இருந்து  அரசூர் வரையும், புகலூரில் இருந்து இடையர்பாளையம் வரையும், புகலூரில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர் வரையும் என 30-க்கும் அதிகமான மின் வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதனால்,  கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், தேனி, திண்டுக்கல், கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். இந்தத் திட்டத்தால் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பகுதியில் 35 முதல் 40  மீட்டர் தொலைவுக்கு விவசாயம் பாதிக்கப்படும். 
இதனால், இத்திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருந்தபோதும், விவசாயிகளின் ஒப்புதலை பெறாமலேயே இதற்கான பணிகளை செய்ய பவர்கிரிட் நிறுவனம் முயற்சி செய்வதாகக் கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில்  இப்பணிகள் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில், புகலூர்-திருச்சூர் உயர்மின் பாதை அமைக்கும் வழியில் உள்ள கிணத்துக்கடவு, பொள்ளாச்சி தாலுகா விவசாயிகளின் கருத்துக்கேட்புக் கூட்டம்  பொள்ளாச்சி சார்-ஆட்சியர் காயத்ரி தலைமையில் பொள்ளாச்சி நேரு மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.  கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வட்டாட்சியர்கள், பவர்கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில், தங்கள் விவசாய நிலங்களை விட்டுத் தரமாட்டோம்.  இந்தத்  திட்டத்தை மாற்று பாதையில், மாற்று முறையில், சாலையோரங்களில் மண்ணுக்கு அடியில் கேபிள் மூலம் கொண்டு செல்லவேண்டும் என வலியுறுத்தினர். இக்கோரிக்கை மனுவை சார்-ஆட்சியரிடம்  வழங்கினர். 
கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு பிறகு விவசாயிகள் சார்பில் உயர்மின் பாதை எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், இத்திட்டத்தற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் மே 6ஆம் தேதி ஈரோடு, வில்லரசம்பட்டி லட்சுமி துரைசாமி திருமண மண்டபத்தில் விவசாயிகள் சார்பில் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அதிகமான விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com