கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா

கோவையில் உள்ள கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா புதன்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

கோவையில் உள்ள கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா புதன்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு துணைவேந்தர் குழு உறுப்பினர் பி.திருநாவுக்கரசு தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் அவர் பேசும்போது, சுதந்திரத்துக்காக பாடுபட்ட மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், தில்லையாடி வள்ளியம்மை போன்ற தலைவர்களின் வரலாறை மாணவ-மாணவிகள் கட்டாயம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து மாணவ, மாணவியர் சுதந்திர தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பின்னர், தேசிய ஒருமைப்பாடு, இணையதள குற்றங்கள், நாட்டுப்புறக் கலைகள் விழிப்புணர்வு தொடர்பான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், துணைவேந்தர் குழு உறுப்பினர் என்.ஜெயக்குமார், பதிவாளர் (பொறுப்பு) பா.வனிதா, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
வேளாண் பல்கலைக்கழகத்தில்: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு துணைவேந்தர் கு.ராமசாமி தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
 நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தேசிய ஒருமைப்பாட்டால் மட்டுமே பெற்ற சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றார்.
 மேலும், உலக அளவில் உணவு தானிய உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்புக்காக மாணவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
 முன்னதாக அவர், பல்கலைக்கழகத்தின் தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம்:
கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி, கோவைப்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் , ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை, அறிவியல் கல்லூரிகளில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
 விழாவில், கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் , முதல்வர்கள் ஜேனட், பி.பேபி ஷகிலா, எஸ்.பழனியம்மாள், பன்சால், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அவினாசிலிங்கம்
 கல்வி நிறுவனத்தில்..
கோவை அவினாசிலிங்கம் மனையியல், மகளிர் உயர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு துணைவேந்தர் பிரேமாவதி விஜயன் தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில், ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் எல்.ஜெயலட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் தி.ச.க.மீனாட்சிசுந்தரம், பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவியர் விழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com