பாபர் மசூதி இடிப்பு தினம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து, முஸ்லிம் அமைப்பினர் 758 பேர் கைது

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து, முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 758 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் கோவை விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கொடிசியா அருகே கட்சி நிர்வாகிகள் திரண்டனர். இதையடுத்து காவல் துறையினர் அவர்களை அப்பகுதியிலேயே தடுத்து நிறுத்தி 40 பேரைக் கைது செய்தனர். பின் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலப் பொருளாளர் ஆருண் ரஷீத் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலர் சுல்தான் அமீர், கலாசார பேரவைச் செயலர் லேனா இஷாக், துணை பொதுச்செயலர் சையது அகமது பாரூக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, போராட்டத்துக்கு வந்தவர்கள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தியிருந்தனர். அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு காவல் துறையினர் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமசரம் ஏற்பட்டதையடுத்து வாகனங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இதில் மனிதநேய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 485 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்ட எஸ்டிபிஐ சார்பில் ஆத்துப்பாலம் பகுதியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மத்திய மாவட்டத் தலைவர் ஏ.முஸ்தபா, தெற்கு மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில பொதுச்செயலர் அப்துல் ஹமீது, திராவிட தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் சி.வெண்மணி, தேசிய பெண்கள் முன்னணியின் மாநிலத் தலைவர் கே.ஷர்மிளா பானு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 அதேபோல், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் இ.அகமது கபீர் தலைமை வகித்தார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது,  மாவட்டச் செயலர் ஜெம் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பாபர் மசூதியை மீண்டும் கட்டித்தர வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
ராமர் கோயில் கட்டக் கோரி...
இதேபோல சக்தி சேனா சார்பில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அமைப்பின் தலைவர் அன்புமாரி தலைமையில் விமான நிலைய முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. கொடிசியா சாலை அருகே இவர்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 37 பேரைக் கைது செய்தனர். இவர்களைத் தொடர்ந்து அதே பகுதியில் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவேகானந்தர் மக்கள் இயக்கத் தலைவர் சிவபிரகாசம் தலைமையிலான 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து இந்து பாரத் சேனா சார்பில் நிறுவனத் தலைவர் வீரராஜா, சுவாமி பாஸ்கரானந்தா, சமூக ஆர்வலர் ப.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மறியலுக்கு முயன்ற பெண்கள் உள்பட 103 பேரை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் கைது செய்தனர். 
இதைத்தொடர்ந்து பாரத் சேனா சார்பில் அதன் மாநில பொதுச்செயலர் போத்தனூர் ரவி, மாநிலச் செயலர் வாசு, மாநில இளைஞர் அணித் தலைவர் ரவி ஆகியோர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற 83 பேரை ரயில் நிலைய பிரதான நுழைவு வாயில் பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com